(து - ம்,) என்பது, வரையாது வந்தொழுகுங் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைவிபடுந் துன்பமனைத்துங் கேட்டு விரைய வரையுமாற்றானே தோழி தலைவியை நோக்கி நமது முன்னைவினையாலே நாம் துன்புறுவதாயிருக்க நீ ஏன் மயங்குகின்றனை ? இதனை அவர்பாற் சென்று கூறுவோம் வா, நீ வாடுதற்கு யான் அஞ்சா நிற்பேன்; நாம்படுந் துன்பத்தைக் கண்டு அவர் குன்றமும் அழாநின்றதுகாண்; அவர்மட்டும் இரங்குவாரல்லாரென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை "அனைநிலைவகையால் வரைதல் வேண்டினும்', என்னும் (தொல்-கள- (23) ) விதியினால் சிறைப்புறமாகத் தோழி தலைவியின் துயர்மிகுதிகூறி வரைவு கடாயது என்க.
| யாஞ்செய் தொல்வினைக்கு எவன்பேது உற்றனை |
| வருந்தல் வாழி தோழி யாஞ்சென்று |
| உரைத்தனம் வருகம் எழுமதி புணர்திரைக் |
| கடல்விளை அமுதம் பெயற்கேற் றாஅங்கு |
5 | உருகி உகுதல் அஞ்சுவல் உதுக்காண் |
| தம்மோன் கொடுமை நம்வயின் ஏற்றி |
| நயம்பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது |
| கண்ணீர் அருவி யாக |
| அழுமே தோழிஅவர் பழமுதிர் குன்றே. |
(சொ - ள்.) தோழி யாம் செய் தொல் வினைக்கு எவன்பேது உற்றனை வருந்தல் வாழி - தோழீ ! நாம் செய்த பழவினை அங்ஙனமாயிருக்க அதனை ஆராயாது நீ எதன்பொருட்டு மயங்குகின்றனை ? அவ்வண்ணம் வருந்தாதே கொள்! நீடுவாழ்வாயாக !; யாம் சென்று உரைத்தனம் வருகம் எழுமதி - இத்துன்பத்தை அவர்பால் நாம் சென்று கூறிவிட்டு வருதும் என்னுடன் எழுவாயாக! புணர் திரைக் கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாங்கு உருகி உகுதல் அஞ்சுவல் - பொருந்திய அலைகளையுடைய கடல் நீரால் விளைந்த உப்புக் குவடு மழையின்கண் அகப்பட்டாற் கரைந்தொழிதல் போல நீ உள்ளம் உருகியொழிதலுக்கு யான் அஞ்சா நிற்பேன்; தம்மோன் நம்வயின் கொடுமை ஏற்றி - தம் தலைவன் நம்மிடத்துச் செய்த கொடுமையை நினைந்து; அவர் பழம் உதிர் குன்று - அவருடைய பழங்கள் உதிர்கின்ற குன்றுகள்; நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது கண்ணீர் அருவி ஆக அழும் - நம்பாற் பெரிதும்