(து - ம்,) என்பது, பரத்தையிற்பிரிந்த தலைமகனால் விடுக்கப்பட்டு வாயில் வேண்டிவந்த பாணன் கேட்பத் தோழி தலைமகளை நோக்கி நின் காதலன் முயங்கும் பரத்தையருள் பெண்டன்மையறியாப் பெதும்பைப் பருவத்தாளொருத்தி ஊசலாடாது அழுது நிற்பதை ஆற்றுவித்து, மீட்டும் ஆடச்செய்யாத அவனது அவை பயனுடையதன்று; அவளழுதூடினமையின் இங்கு வந்தான்போலுமென வெகுண்டு கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு "பாணர்கூத்தர் விறலியர் என்றிவர், பேணிச் சொல்லிய குறைவினை எதிரும், என்னும் (தொல்-கற்- 9 ) விதி கொள்க.
| ஆடியல் விழவின் அழுங்கன் மூதூர் |
| உடையோர் பான்மையின் பெருங்கை தூவா |
| வறனில் புலத்தி எல்லித் தோய்த்த |
| புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு |
5 | வாடா மாலை துயல்வர ஓடிப் |
| பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் |
| பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள் |
| அழுதனள் பெயரும் அஞ்சில் ஓதி |
| நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள் |
10 | ஊசல் ஊறுதொழிற் பூசல் கூட்டா |
| நயனின் மாக்களொடு குழீஇப் |
| பயனின்று அம்மவிவ் வேந்துடை அவையே. |