பக்கம் எண் :


156


நாலும் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள் - கரிய பனைநாரினாலே திரித்த கயிற்றைப் பிணித்துத் தொங்கவிட்ட வூசலிலேறிப் பூப்போல் உண்கண்களையுடைய தன் ஆயத்தார் அதனை ஆட்டவுந் தான் ஆடாளாய், அழுதனள் பெயரும் அஞ்சில் ஓதி நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள் - அழுது மீளுகின்ற அழகிய சிலவாகிய கூந்தலையுடைய பெண்தன்மையிற் குறைவுபட்ட சிலவாய வளைகளை யணிந்த பரத்தையாகிய பெதும்பைப் பருவத்தாள் ஓரிளமகளை; ஊசல் உறுதொழில் பூசல் கூட்டா-மீட்டும் ஊசலாடுகிற மிக்க தொழிலின் ஆரவாரத்திற் செய்யாத; நயனில் மாக்களொடு குழீஇ - விருப்பமற்ற மக்களொடு சேர்ந்து; இவ்வேந்து அவை பயன் இன்று அம்ம - இவ்வேந்தனது அவைக்களந்தான் பயனின்மையுடையதாயிரா நின்றது; இது மிக்க வியப்பு; அவளை ஆடச் செய்திருந்தால் அவள் ஊடாள்; தலைமகனும் அவளை நீங்கான்; ஆண்டு அவள் ஊடினமையால் இறைமகன் இங்கு வந்தான் போலும்; இனி இங்கு வாரா தொழிவானாக !; எ - று.

    (வி - ம்.) உடைஓர் பான்மை - ஆடையை ஆராய்கின்ற பகுதி. கைதூவாமை - கையொழியாமை. புலத்தி - ஆடையொலிக்குந் தொழிலி, வண்ணாத்தியென்ப. புகா - உணவு; ஈண்டுச் சோறு. புகர் - கஞ்சி. ஊக்கல் - அசைத்தல். நல்கூர்பெண்டு - பெண்தன்மையில்லாள். பெண்தன்மை, நாணமுதலியன. மாக்கள் - பாணன் முதலானோர். நயனின்மை - தூதாடலின் பயனைப் பெறாமை; பெதும்பையாதலின், பயனின்று என்பது இகழ்ச்சிக் குறிப்பு, அவளை ஆட என்பது முதற் குறிப்பெச்சம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் -வாயின் மறுத்தல்.

    (பெரு - ரை.) இச்செய்யுளை ஆசிரியர் இளம்பூரண அடிகளார் தலைவியின் கூற்றாகக்கொண்டு "வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇக் கிழவோள் செப்பல் கிழவது என்ப" என்பதற்கு(தொல்-கற்- 6.) எடுத்துக்காட்டினர், 'பூசல் ஊட்டா' என்றும் பாடம்.

(90)
  
    திணை : நெய்தல்,

    துறை :இது, தோழி தலைமகட்கு வரைவு மலிந்துரைத்தது.

    (து - ம்.) என்பது, வரைபொருட்பிரிந்த தலைமகன் பகற்பொழுதையில் வெளிப்படையாக வருதலானே, வரையக்கருதினன்போலுமென்றுணர்ந்த தோழி, தலைவியை நோக்கிச் சேர்ப்பன் பகற்காலத்திலே பலருங்காண இங்கு வருதலை நீ யறிந்தனையன்றோவெனக் குறிப்பால் வரைவுமலிதலை மகிழ்ந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை "ஆங்கு அதன் தன்மையின் வன்புறையுளப் பட" என்பதன்கண் (தொல்-கள- 23) அமைத்துக்கொள்க.