(சொ - ள்.) நறு வீ ஞாழல் மாமலர் தாஅய்ப் புன்னை ததைந்த வெண்மணல் ஒருசிறை-தோழீ ! நறு மணம் கமழ்கின்ற பூவையுடைய ஞாழலின் சிறந்த மலரும் புன்னையின் சிறந்த மலரும் உதிர்ந்து பரவி நெருங்கிய வெளிய மணற்பரப்பினொருபால்; புதுவது புணர்ந்த பொழில் இது - என்னைப் புதுவதாக இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த சோலை இதுவே என்றும்; பொம்மல் படுதிரை நம்மோடு ஆடி புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் துவரினர் அருளிய துறை உது - பொலிவு பொருந்திய கடலில் நம்மோடு நீராடி என் முதுகிலே தாழ்ந்திருண்ட விளங்கிய ஐம்பாலாக வகுக்கும் கூந்தலைப் பிழிந்து துவட்டினராயருளிய துறை உதுவே என்றும்; கொடுங்கழை நிவந்த நெடுங்கால் நெய்தல் அம் பகை நெறித்தழை அணிபெறத் தைஇத் தமியர் சென்ற கானல் அது என்று - வளைந்த தண்டு உயர்ந்த நீண்ட காம்புடைய நெய்தலின் அழகிய ஒன்றோடொன்று மாறுபடத் தொடுத்த நெறிப்பையுடைய தழையை அழகுபெற எனக்கு உடுப்பித்துத் தமியராய்ச் சென்றுவிட்ட கழிக்கரைச் சோலை அதுவே யென்றும்; ஆங்கு உள்ளுதோறு உள்ளுதோறு உருகி பை இப்பையப் பசந்தனை - அவ்வண்ணம் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் உள்ளமுருகி மெல்ல மெல்லப் பசப்பை மேற்கொண்டு பசந்து காட்டினை; இனி எவ்வாறுய்குவாய்?; எ-று.
(வி - ம்.) பொம்மல் - பொலிவு. துவருதல் - துவட்டுதல். கழை - தண்டு.புணர்ந்தபொழிலிது என்பது முதலாய மூன்றுந் துன்பத்துப் புலம்பல். உள்ளுதோறுருகியென்றது ஆங்குநெஞ்சழிதல். பசப்புப் பசந்தனை யென்றது பசலைபாய்தல். ஏனை மெய்ப்பாடு - அவலத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் -வரைவுகடாதல்.
(பெரு - ரை.) புணர்ந்த பொழில் இது. அருளிய துறை உது, சென்ற கானல் அது என்று இயைக்க. இது நலந்தொலைவு குறிப்பானுணர்த்தி வரைவு கடாயபடியாம்.
(96)
திணை : முல்லை.
துறை : இது, பருவங்கண் டாற்றாளாய தலைவி தோழிக் குரைத்தது.
(து - ம்,) என்பது, வினைவயிற் பிரிந்துசென்ற தலைமகன் குறித்த பருவத்து வாராமையால் அக்காலத்துண்டாகிய கருப்பொருண் முதலாயவற்றைக் கண்டு வருந்திய தலைவி, ஆற்றுவிக்குந் தோழியை நோக்கிக் குயில்கூவுமோசையும்., யாற்றுநீர்ப் பெருக்கும், நறுமலர்விற்கு மகளும் எனக்குக் காமநோயைத் தோற்றுவித்துக் கொடுமை செய்தலின், யான் எவ்வாறுய்வேனென வருந்திக் கூறாநிற்பது.