பக்கம் எண் :


167


    (இ - ம்.) இதனை, "அவனறிவு ஆற்ற அறியுமாகலின்" (தொல்-கற்- (9) ) என்னும் நூற்பாவினுள் 'ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும் என்பதன்கண் அமைத்துக் கொள்க.

    
அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா 
    
எவ்வ நெஞ்சத்து எஃகெறிந் தாங்குப் 
    
பிரிவில புலம்பி நுவலுங் குயிலினுந் 
    
தேறுநீர் கெழீஇய யாறுநனி கொடிதே 
5
அதனினுங் கொடியள் தானே மதனின்  
    
துய்த்தலை இதழ பைங்குருக் கத்தியொடு 
    
பித்திகை விரவுமலர் கொள்ளீ ரோவென 
    
வண்டுசூழ் வட்டியள் திரிதரும் 
    
தண்டலை உழவர் தனிமட மகளே. 

    (சொ - ள்.) அழுந்துபடு விழுப்புண் வழும்பு வாய் புலரா எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்து ஆங்கு - தோழீ ! நெடுங்காலம் முன்னுண்டாகி ஆழ்ந்த பெரிய புண்ணின் வாய் நிணங் காயாத துன்பத்தையுடைய மார்பினிடத்தில் வேற்படையைக் குற்றிப்பாய்ச்சினாற் போல; பிரிவு இல புலம்பி நுவலும் குயிலினும் தேறுநீர் கெழீஇய யாறு நனி கொடிதே - என் அருகிலிருந்து பிரியாதனவாய் வருந்திக் கூவுங் குயிலினுங் காட்டில் நன்றாகத் தெளிந்த நீர் கெழுமி வருகின்ற யாறு மிகக் கொடியதாயிரா நின்றது; மதனின் துய்த்தலை இதழ பை குருக்கத்தியொடு பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என - அழகுடைய பஞ்சு போன்ற மேலே புறவிதழையுடைய பசிய குருக்கத்திமலருடனே விரவிய சிறு சண்பக மலரையும் விலைக்குக் கொள்ளீரோ ? என்று; வண்டு சூழ் வட்டியள் திரிதரும் - அம்மலர்களை இட்டு வைத்தலால் வண்டுகள் சூழ்கின்ற கடகப் பெட்டியைக் கைக்கொண்டு திரியாநிற்கும்; தண்தலை உழவர் தனி மடமகள் தான் - சோலையின்கணுள்ள உழுதுண்ணு மாக்களின் ஒப்பற்ற இளமகளாவாள்தான்; அதனினும் கொடியள் - அவ் யாற்றினுங்காட்டில் மிகக் கொடியளாயிராநின்றாள்; இங்ஙனமாகையில் யான் எவ்வாறு ஆற்றியுய்குவன் ? எ - று.

    (வி - ம்.) வழும்பு - நிணம். மதன் - அழகு. பித்திகை - சிறுசண்பகம். வட்டி - கடகப் பெட்டி. தலைவன் குறித்த காலம் குயில் கூவி, யாற்றில் நீர்பெருகி, குருக்கத்தி சிறு சண்பக முதலாயின மலருங் கார்ப்பருவத்தில் வருவேனென்றானென்பது. குயிலோசைக்கு எஃகெறிந்ததைக் கூறியது கிழக்கிடுபொருள் நிலைக்களமாக முதலுஞ் சினையும் விராய்வந்த பண்புவமம். குயிலோசை முதலியன இன்பத்தை வெறுத்தலும் துன்பத்துப் புலம்பலுமாம்.