(வி - ம்.) உழத்தல் - தன்போற் காட்சியிற் பெருவிதுப்புறுதல். அல்கல் - மிகுதல். உழந்த மடவோளென இயைக்க. அறிவனரென்பது முதல் நெய்தற்கு அடை, போர்வு - கதிர்ப்போர். பொறை - மலை: மலைநாடனாதலிற் சேரலன் பொறையனெனப்பட்டான். பெரிதுமோர் இன்பந் துய்த்தாலன்றிப் பயந்தோரை வாழ்த்தல் இயல்பின்மையின் இஃது இயற்கைப்புணர்ச்சி யிறுதிக்கட் கூறியதாயிற்று பொறையனது தொண்டி எல்லாவளனும் பெற்றுத் திகழ்தல்போல, ஈன்றதாய் எல்லா வளனும் பெற்றுத் துய்க்க வென்றானாம். நெய்தல் அரிவோரால் அரிந்து கொணரப்பட்டுக் கதிர்ப்போரினும் மலருமென்றதனாலே, இவள் யாண்டுச் செல்லுகினும் ஆண்டுச் சிறப்பெய்துக வென்றவாறு.
மெய்ப்பாடு - உவகையைச் சார்ந்த மருட்கை.
பயன் - பயந்தோர்ப்பழிச்சல். இதனைப் புணர்தனிமித்த மென்பர் நச்சினார்க்கினியர்;
(தொ,பொ-14, உரை.) (பெரு - ரை.) எம்மே என்புழி ஏகாரம், தெளிவின்கண் வந்தது. அசையாத உள்ளமுடைய எம்மையும் என்பதுபட நின்றது. இயற்கைப் புணர்ச்சி எய்திய பெருமிதம் தோன்றக் கண்ணையும் அல்குலையும் மேனியையும் விதந்தோதினன். யார் மகள் என்றது இத்தகைய மாண்புடைய இவள் என்ப துபட நின்றது. தந்தையினும் காட்டிற் றாயே சிறந்தமையான் தந்தை வாழி என வாளா கூறித் தாய் தொண்டிதன் திறம் பெறுக என்று விதந்தோதினன். நெய்தல் பூக்கும் என்றது பெறுபவர் பெற்று, வளர்ப்பவர் வளர்த்து எனக்கு இன்பந்தந்தனள் என்பதையுங் குறிக்கும்.
(8)