(து - ம்,) என்பது, குறையுறவுணர்தல் முதலாய மூன்றனாலும் இவனொரு குறையுடையான் போலுமென்று தோழி உய்த்துணரநிற்குமிடத்து இரந்து பின்னின்ற தலைமகன் தான் தலைவியிடத்து வைத்த காதலினாலே படுந்துன்பத்தைத் தோழி அறியுமாற்றானே அவள் கேட்பப் பரதவர் மடமகளுடைய கண்களை யான் பார்க்கு முன்பு புலவு நாற்றத்தையுடைய பாக்கமும் எனக்கு இனிதாகவே யிருந்தது; இப் பொழுதோவெனில் அஃது அங்ஙன மின்மையா லிரங்கத்தக்க தாயினதேயென்று வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "மெய்தொட்டுப் பயிறல்" (தொல்-கள- 11) என்னும் நூற்பாவின்கண் வரும் 'குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்' என்னும் விதி கொள்க.