| முற்றா மஞ்சள் பசும்புறங் கடுப்பச் |
| சுற்றிய பிணர சூழ்கழி இறவின் |
| கணங்கொள் குப்பை உணங்குதிறன் நோக்கிப் |
| புன்னையங் கொழுநிழல் முன்னுய்த்துப் பரப்புந் |
5 | துறைநணி யிருந்த பாக்கமு முறைநனி |
| இனிதுமன் அளிதோ தானே துனிதீர்ந்து |
| அகன்ற அல்குல் ஐதமை நுசுப்பின் |
| மீனெறி பரதவர் மடமகள் |
| மானமர் நோக்கங் காணா ஊங்கே. |
(சொ - ள்.) துனி தீர்ந்து அகன்ற அல்குல் ஐது அமைநுசுப்பின் மீன் எறி பரதவர் மடமகள் மான அமர் நோக்கம் காணா ஊங்கு - வருத்தமின்றி, அகன்ற அல்குலையும் மெல்லிதாயமைந்த இடையையுமுடைய மீன் பிடிக்கின்ற பரதவர்தம் இள மகளின் மான்போலும் ஒன்றோடொன்று மாறுபட்ட பார்வையைக் காணப்பெறாதமுன் உவ்விடத்தே: முற்றா மஞ்சள் பசும் புறங் கடுப்பச் சுற்றிய பிணர சூழ் கழி இறவின்-முற்றாத இளமஞ்சட் கிழங்கின் பசிய புறத்தைப் போலச் சுற்றியிருக்கின்ற சருச்சரையையுடைய சூழ்ந்த கழியிடத்துள்ள இறாமீனின் கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி-கூட்டங் கொண்ட குவியல் காயும் வகையை ஆராய்ந்து; புன்னை அம் கொழுநிழல்முன் உய்த்துப் பரப்பும் துறை நணி இருந்த பாக்கமும் - புன்னையினது அழகிய கொழுவிய நிழலின் எதிரே போகட்டுப் பரப்புந் துறைக்கு அணித்தாயிருந்த பாக்கமும;் முறை நனி இனிதுமன் - முறையே மிக இனிமையுடையதாயிருந்தது; அஃது இற்றைநாளால் அப்பரதவர் மகளின் நோக்கங் காணப்பெற்றமையாலே கழிந்து போகியதாகலின்; அளிது - இரங்கத் தக்கதாயிராநின்றது; எ - று.
(வி - ம்.) பாக்கம் - கடற்கரையிலுள்ள ஊர். ஐது-மெல்லிது. ஊங்கு -உவ்விடம். பிணர இறவென்க துறையேயன்றிப் பாக்கமு மினிதாயிருந்த தென்க.
பாக்கமுமென்ற இழிவு சிறப்பும்மையால் மீன்புலர்தலி னாற்ற மிக்குளதா யிருந்தும் தோற்றப்பொலிவா லினிமையாயிருந்ததெனவுமாம். காணாமுனினிதா யிருந்தது கண்டபின் இன்னாமையதாதலின் அவ்வின்னாமை யொழியுமாறு கருதுக வென்றானாம். ஒருநோக்கு நோய்நோக்கும் மற்றது அன்னதன் மருந்துமாதலின் தொழில்மாறுபட்ட நோக்கங்களாயின. புன்னைமுன் பரப்புதல் நிழலிலிருந்து புள்ளோப்புதற் பொருட்டு.
இறைச்சி :- இறவு காயுந்திறநோக்கிப் புன்னைநிழலின் முன்பு பரப்புமென்றது யானும் என்போன்ற பெருவேட்கையாளாகிய பரதவர் மகளுங்கொண்ட காமநோயைப் போக்குமாறு பகற்குறியிடனாகக் கருதத்தகும்