(து - ம்,) என்பது, இருவகைக் குறியானும் வந்தொழுகுந் தலைமகன் இடையீடுபட்டு வாராதொழியக்கண்ட தலைமகள் வரைதல் விருப்பினளாய் வேட்கை பெரிதுஞ் சிறப்பச் சிந்தித்துக் கிளியை நோக்கி கிள்ளாய்! என் தலைவரது நாட்டிலுள்ள நின் சுற்றத்தாரிடஞ் சென்றகாலை ஆங்கு என் காதலரை நோக்கி இம்மலைக்குறவர் மகள் மீட்டும் தினைப்புனங்காவல் செய்யுமாறு வந்தனளென இவ்வொன்றனை மட்டுஞ் சொல்வாயாகவென்று இரந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு. "காமஞ் சிறப்பினும்" (தொல். கள. 20) என்னும் விதி கொள்க.
| கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி |
| அஞ்ச லோம்பி ஆர்பதங் கொண்டு |
| நின்குறை முடித்த பின்றை என்குறை |
| 1 செய்தல் வேண்டுமால் கைதொழுது இரப்பல் |
5 | பல்கோட் பலவின் சாரல் அவர்நாட்டு |
| நின்கிளை மருங்கிற் சேறி யாயின் |
| அம்மலை கிழவோர்க்கு உரைமதி இம்மலைக் |
| கானக் குறவர் மடமகள் |
| ஏனல் காவல் ஆயினள் எனவே. |
(பாடம்) 1. | சொல்லல்வேண்டுமார். |