(சொ - ள்.) கொடுங் குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி - வளைந்த தினைக் கதிர்களைக் கொய்துகொண்டு போகாநின்ற சிவந்த வாயையுடைய பசிய கிள்ளாய்; அஞ்சல் ஓம்பி ஆர்பதம் கொண்டு நின் குறை முடித்த பின்றை - அஞ்சாதே கொள்! நீ இக்கதிர்களைக் கொய்தல் காரணமாக யாரேனும் நின்னை அச்சுறுத்துவார் கொல்லோ? என்னும் ஐயத்தைப் போக்கி ; வேண்டிய உணவைக் கொண்டுநின் குறையெல்லாம் முடித்த பின்பு; என் குறை செய்தல்வேண்டும் கைதொழுது இரப்பல் - ஒழிவெய்திய காலத்தில் என்னுடைய குறைபாட்டைச் செய்து முடிக்க வேண்டும். இது நின்னை யான் என் கைகளைக் குவித்துத் தொழுது இரந்து கேட்கின்றேன்; பல் கோள் பலவின் சாரல் அவர் நாட்டு நின் கிளை மருங்கின் சேறி ஆயின் - அக்குறைபாடுதான் யாதோவெனின் பலவாய காய்களைக் காய்க்கின்ற பலா மரங்கள் மிக்க சாரலையுடைய அவர் நாட்டின்கணுள்ள நின் சுற்றத்தினிடத்து நீ ஒருபொழுது செல்லுவையாயின்; அம் மலை கிழவோர்க்கு இம் மலைக் கானக் குறவர் மடமகள் - அம்மலைக்கு உரியராகிய எனது காதலரை நோக்கி இந்த மலையைச் சூழ்ந்த காட்டின்கணுள்ள குறவருடைய இளமகள் முன்போலவே; ஏனல் காவல் ஆயினள் என உரை - தினைக் கொல்லைக் காவலுக்கு அமைந்து ஆண்டிருக்கின்றாளென்று இவ்வொன்றனை மட்டும் உரைத்து என் இவ்வொரு குறையைச் செய்துமுடிப்பாயாக ! எ - று.
(வி - ம்.) குரல் - கதிர். ஆர்பதம் - உணவு. கோள் - காய்.
சொல்லென ஏவியவழி மறுக்குங்கொல்லோ, உடன்படுங்கொல்லோ வென்னும் ஐயுறவால் கிளைமருங்கிற் சேறியாயினென்றாள். அது மறாமற் செய்தற்பொருட்டு இரப்பரென்று தன்னைத் தாழ்த்தியும் தொழுதென அதனை யுயர்த்தியுங் கூறினாள். ஆயினளெனவுரை யென்றது தூதுமுனிவின்மை.
இறைச்சி :- என்னைக் கைவிட்ட கொடுமையையுடையவர் சாரலாயிருந்தும் அச்சாரலின்கணுள்ள பலாமரங்கள் பிறர்க்குப் பயன்படுமாறு காய்க்கின்றனவே; இஃதென்ன வியப்போவெனப் பொருட்புறத்தே இறைச்சி தோன்றியதறிக. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) ஆர்பதம் : வினைத்தொகை. அவர் மலைச்சாரற்குச் செல்வாயாயின் இத்தினையினும் இனிய பலாச்சுளையை ஆர்பதமாகப் பெறலும் பெறுகுவையென ஆண்டுச் செல்லுதற்கோர் ஊதியமும் கூறுவாள் பல்கோட் பலவின் சாரல் அவர் நாடென்றாள் என்க.
(102)
திணை : பாலை.
துறை :இது, பொருள்வயிற் பிரிந்த தலைவன் இடைச்சுரத்து ஆற்றாதாகிய நெஞ்சினைக் கழறியது.