பக்கம் எண் :


180


அவனைக் களவொழுக்கத்து இரவுக்குறி வருமாறு செய்கின்றனை, வராதபடி தடுத்தாயல்லை யெனத் தோழியைச் சுட்டி யுரைத்ததாயிற்று. நயந்துறையும் யானென்றது அவன் பாலுள்ள அன்பின் மிகுதி காட்டியதாம். இஃது, அழிவில் கூட்டத்து அவன் புணர்வுமறுத்தல்.

    உள்ளுறை :- புலி யானையொடு போர் செய்யக் கண்ட குறக்குறுமாக்கள் துறுகல்லேறி முழக்குந் தொண்டகப் பறையினொலியானது தினைக்கொல்லையிலே பயில்கின்ற கிள்ளையை வெருட்டாநிற்கும் என்றது (இங்ஙனம் வரையாது வந்தொழுகுங்காலை வேற்று வரைவு நேரினும் நேரும், நேர்ந்தவழி) வேற்றுவரைவுக்குப் புகுந்தானொடு எமர் அளவளாவி யுடன்படக் கண்ட ஆயத்தார் கூடி மகிழ்ந்து என்பால் வந்து கூறும் மாராயவுரையானது என்னுடம்பின்கணுள்ள உயிரைப் போக்காநிற்குமென்றதாம். மெய்ப்பாடு - அச்சம். பயன் - வரைவுடம்படுத்தல்.

    (பெரு - ரை.) தேங்கமழ் சிலம்பின் என்பதற்குத் தேன்மணங் கமழும் மலையின் கண்ணே ! என்றல் தெளிபொருளாகப் பொருந்திக் கிடப்பவும் தேங்கமழ் சிலம்பின் என்பதற்கு உரையாசிரியர் இடமகன்ற மலையின்கண்ணே என்று இடர்ப்பட்டுப் பொருள் கூறியதனால் சிறப்பு ஒன்றுமின்மை யுணர்க.

    இனி, பைந்தாள் செந்தினை என்புழி முரண் தோற்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. இனி ஏற்றையும் களிறும் போர் செய்வதனைக் கண்ட குறுமாக்கள் எறிந்த பறைப்பாணி தினையிற்படியும் கிளியை ஓட்டும் என்றது, நம் பெருமானும் யாமும் ஒழுகும் களவொழுக்கம் புலப்பட்டுழி இவ்வூர்ப் பெண்டிர் தூற்றும் அலரானே என்னாவி அகலும் என்னும் உள்ளுறை யுடைத்தெனலே போதியதாம் என்க.

(104)
  
    திணை : பாலை.

    துறை : இஃது, இடைச்சுரத்து மீளலுற்ற நெஞ்சினைத் தலைமகன் கழறியது.

    (து - ம்,) என்பது, பொருள்வயிற் பிரிந்து சுரத்தின்கட் சென்ற தலைமகன் தலைவியைக் கருதி மீளலுற்ற நெஞ்சினை நோக்கி, நெஞ்சமே, நீ முதலிலே காடு கடுமையதென்னாமல் நம் காதலி அங்கு வருந்தும்படி புறப்பட்டு நெடுந்தூரம் வந்துற்றனை: இன்று மீளலுறுவையாயின் நின் முயற்சி நன்று கண்டாய்; இங்ஙனமே நீ வாழ்வாயாகவென இகழ்ந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "கரணத்தினமைந்து முடிந்தகாலை" (தொல். கற். 5) என்னும் நூற்பாவின்கண் வரும் 'மீட்டுவரவு ஆய்ந்த வகையின்கண்ணும'் என்னும் விதி கொள்க.

    
முளிகொடி வலந்த முள் அரை இலவத்து 
    
ஒளிர்சினை அதிர வீசி விளிபட