(து - ம்,) என்பது, வினைமுற்றி மீளுந்தலைவன் விரைவிலே தனது தேரைச் செலுத்தவேண்டி முன்பு ஊரினின்று போதரும் பொழுது தலைவி வருந்திய நிலையைக் குறித்துக்காட்டுவான் பாகனை நோக்கிப் பாக! யான் காதலிபாற் சென்று என் கருத்தினைச் சொன்ன பொழுது, விடை கூறவியலாது முறியைத் திமிர்ந்துதிர்த்த கையொடு துன்புற்று அவள் நின்ற நிலையை நீ அறிதலும் அறிந்திருப்பாயோ வெனக் கவன்று கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.
| அறிதலும் அறிதியோ பாக பெருங்கடல் |
| எறிதிரை கொழீஇய எக்கர் வெறிகொள |
| ஆடுவரி அலவன் ஓடுவயின் ஆற்றாது |
| அசைஇயுள் ஒழிந்த வசைதீர் குறுமகட்கு |
5 | உயவினென் சென்றியான்1உள்நோய் உரைப்ப |
| மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறுமலர் |
| ஞாழல் அஞ்சினைத் தாழிணர் கொழுதி |
| முறிதிமிர்ந்து உதிர்த்த கையள் |
| அறிவஞர் உறுவி ஆய்மட நிலையே. |
(சொ - ள்.) பாக பெருங் கடல் ஏறி திரை கொழீஇய எக்கர் வெறிகொள - பாகனே ! பெரிய கடலின் மோதுகின்ற திரையாலே கொழிக்கப்பட்ட மணன் மேட்டில் நறுமணம் வீசாநிற்ப; ஆடுவரி அலவன் ஓடு வயின் ஆற்றாது அசைஇ உள் ஒழிந்த வசைதீர் குறுமகட்கு - விளையாடுகின்ற புள்ளிகளையுடைய ஞெண்டைப் பிடிக்குமாறு சென்றவழி அஞ்ஞெண்டு