(வி - ம்.) அரி - பருக்கைக்கல். அரிநரை - மெல்லியநரை. பரிதல் - ஓடுதல்.
பாலுணவையும் வெறுப்பவள் பொழுது மறுத்துண்பாளாயது அதனினும் கேள்வனின்பஞ் சிறந்தது போலுமென் றிரங்கினாள். விளையாட்டி யாண்டுணர்ந்தனனென்றது நம் ஏவலை மறுத்து விளையாடுபவள் காதலன் ஏவலும் அவனுக்கேற்றபடி நடத்தலுமாகியவற்றுக்கேற்ற அறிவும் ஆசாரமும் எவ்வாறு பெற்றனளென்று வியந்ததாம். மெய்ப்பாடு - உவகைக் கலுழ்ச்சி. பயன் - ஆற்றாமை நீங்குதல். இஃது உரிப் பொருளாற் பாலை.
(2) உரைமேற்கூறியதே யொக்கும். மெய்ப்பாடு - உவகை. பயன் - மகிழ்தல்.
(பெரு - ரை.) பிரசம் - தேன். தேன் கலந்த சுவைமிக்க வெளிய இனிய பால் எனலே சாலும். தேன் கலந்தா லொத்த எனல் வேண்டா கூறலாம். புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் என்பதற்குப் புடைத்துழிப் புடைக்கப்படுவோரைச் சுற்றிக்கொள்ளும் இயல்புடைய பூவைத் தலையிலே யுடைய பசிய சிறிய கோல் என்க. துவளும் இயல்புடையதும் புடைத்துழி நோகாமைப் பொருட்டுத் தலையிலே மலர் உளதாக ஒடித்துக் கொண்ட சிறிய பசிய பூங்கொம்பு என்பது கருத்து. பந்தர் - மல்லிகை முல்லை முதலிய படர்ந்த பூம்பந்தர். சிறுமியாகலின் முது செவிலியர் புகவியலாத பூம்பந்தரின் கீழ்ப் புகுந்து கொண்டு அவர் ஏவலை மறுத்தாள் என்பது கருத்து. சிறு மதுகை - சிறு பருவத்திலேயே எய்திய பெருவன்மை என்றவாறு.
இனி இச்செய்யுளை நற்றாய் கூற்று என்பதினும் செவிலி கூற்றென்பதினும் காட்டில் அகம்புகன் மரபின் வாயில்களாகிய தோழி முதலியோர் தம்முட் கூறிக் கொண்டது என்று கோடலே மிகவும் பொருந்துவதாகும். இதற்கு "கற்புங் காமமும் நற்பா லொழுக்கமும், மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின், விருந்துபுறந் தருதலும் சுற்ற மோம்பலும், பிறவு மன்ன கிழவோள் மாண்புகள், முகம்புகன் முறைமையிற் கிழவோற் குரைத்தல், அகம்புகன் மரபின் வாயில்கட்குரிய" (தொல். கற். 11) என்னும் விதி கொள்க.
இனி, இச்செய்யுள் இவ்விதி பற்றியும் செய்யுளியலுள் "வாயிலுசாவே தம்முளு முரிய என்பதனால் தலைமகற் குரைத்தலேயன்றித் தம் முட்டாமே" கூறியதாக ஆசிரியர் இளம்பூரணர் கூறுதலும் காண்க. (தொல். கற்பு. 11. உரை.).