| விருந்தெவன் செய்கோ தோழி சாரல் |
| அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கைச் |
| சுரும்பிமிர் அடுக்கம் புலம்பக் களிறட்டு |
| உரும்பின் உள்ளத்து அரிமா வழங்கும் |
5 | பெருங்கல் நாடன் வரவறிந்து விரும்பி |
| மாக்கடல் முகந்து மணிநிறத் தருவித் |
| தாழ்நீர் நனந்தலை அழுந்துபடப் பாஅய் |
| மலையிமைப் பதுபோல் மின்னிச் |
| சிலைவல் ஏற்றொடு செறிந்தஇம் மழைக்கே. |
(சொ - ள்.) தோழி சாரல் அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கைச் சுரும்பு இமிர் அடுக்கம் புலம்ப - தோழீ ! மலைச்சாரலில் அரும்பு முழுதும் ஒருசேர மலர்ந்த கரிய கிளைகளையுடைய வேங்கையின்கண்ணே சுரும்பு முரலுகின்ற பக்கமலையிலுள்ள வெல்லாம் அஞ்சும்படியாக; களிறு அட்டு உரும்பு இல் உள்ளத்து அரி மா வழங்கும் பெருங் கல் நாடன் - களிற்றைக் கொன்று அச்சமற்ற உள்ளத்தையுடைய சிங்கம் இயங்கா நிற்கும் பெரிய மலைநாடன்; வரவு அறிந்து விரும்பி - கார்ப்பருவத்தின்கண் வருவேன் என்று கூறிச் சென்றபடி மீண்டு வருகின்றான் என்பதை அறிந்து விருப்பமுற்று; மா கடல் முகந்து மணிநிறத்து அருவி தாழ்நீர் நனந்தலை அழுந்து படப் பாஅய் - கரிய கடலின்கண்ணே சென்று நீரையுண்டு மணிபோலும் நிறத்தினையுடைய அருவியினிழிகின்ற நீரையுடைய அகன்ற இடமெல்லாம் மறைபடுமாறு பரவி; மலை இமைப்பது போல் மின்னிச் சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கு - மலையானது கண்விழித்து இமைத்தாற் போல மின்னி ஒலிக்கின்ற வலிய இடியேற்றுடனே கலந்து வந்த இந்த மழைக்கு; விருந்து எவன் செய்கு - யான் யாது கைம்மாறு செய்ய மாட்டுவேன் ? எ - று.
(வி - ம்.) விருந்து - புதுவதாகச் செய்யு முகமனுமாம். உருப்பு - அச்சம்: எதுகை நோக்கி மெலிக்கும் வழி மெலித்தது. நனந்தலை - அகன்றவிடம். அழுந்துபடல் - மூடப்படுதல்.
பகுத்தறிவில்லாத முகிலும் அவன் வருவதறிந்து விரும்பி வருதலைக் கண்டுவைத்தும் எல்லாவறிவுமுடைய நீ அவன் வருகையை யறியாது புலம்புகின்றனையே யென்று இரங்கியவாறாயிற்று.
இறைச்சி :- அடுக்கம் புலம்பக் களிற்று யானையைக் கொன்று சிங்கம் இயங்குமென்றது நினது பசப்பு வருந்திக்கெட உனக்குண்டாகிய காமநோயைப் போக்கி நின் தலைவன் நின்மாட்டு அகலாது பலகாலு முயங்காநிற்கு மென்றதாம். கைகோள் இரண்டற்கும் பொது. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.