பக்கம் எண் :


197


இனையக் கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்று - கரிய நிறத்தையுடைய இளம்பிடி வருந்துமாறு தனது துதிக்கையை ஊன்றி இறங்குகின்ற களிற்றின் மேலே பாய்ந்து அதனைக் கொன்றொழிந்தது; வெண்கோடு கொண்டு வியல் அறை வைப்பவும் பச்சூன் கெண்டி வள்உகிர் முணக்கவும் - அங்ஙனம் இறந்த யானையை நம் ஐயன்மார் பிளந்து அதன் வெளிய கோடுகளையெடுத்து அகன்ற பாறையின்கண்ணே ஊன்காயுமாறு போகடுவதாகவும் அதன் பசிய ஊனை அழித்து மிகப் பெரிய உகிர்களைப் புதைப்பதாகவும் பேசிக் கொள்ளுகின்ற இவற்றாலே; புலாவு அம் சிறுகுடி மறுகுதொறும் அரவம் வைகிக் கேட்டுப் பையாந்திசின் - புலவு மணங் கமழ்கின்ற சிறுகுடியிலுள்ள தெருவுதோறும் உண்டாகும் ஆரவாரத்தை இரவு முழுதும் துயிலாதிருந்து கேட்டு வருந்தினேன்; அல்கல் குன்றநாடன் மன்ற வந்தோன் - அத்தகைய இரவிலே குன்ற நாடனும் திண்ணமாக இரவுக்குறி கூடும்படி கருதி வந்தனன்காண் !; துளி பெயல் பொறித்த புள்ளித் தொல்கரை பொரு திரை நிவப்பின் வரும்யாறு அஞ்சுவல் - அவன் வருநெறியில் மழையின் துளி பெய்தலாலே பொறிக்கப்பட்ட புள்ளிகளையுடைய பழைமையாகிய கரையை மோதுகின்ற உயர்வையுடைய அலைகளோடு வருகின்ற கான்யாற்றினைக் கருதி யான் அஞ்சா நின்றேன்; அளிதோ தானே - ஆதலின் அவன் இரவுக்குறி வருதல் இரங்குவதற்குரிய தொன்றாயிரா நின்றது; எ - று.

    (வி - ம்.) வைத்தல் - போக்குதல்; விடுத்தல். முணக்கல் - அடக்குதல். கெண்டுதல் - வெட்டுதல். பையாத்தல் - வருந்துதல். அல்கல் - இரவு. வந்தோன்: முற்று. இடியோசைகேட்ட பாம்பு நடுங்கியொடுங்கல் வெளிப்படை. பொத்தல் - மோதல்.

    நாடன் வந்ததறிந்ததும் குறியிடத்து இறைவியைக் கொண்டு செல்லாதது ஊர் துஞ்சாமையானென அறிவுறுத்துவாள் அரவங்கேட்டுப் பையாந் திசினென்றாள். தலைமகன் வெறாதபடி அவன்பால் அன்புடைமை காட்டுவாள் அளிதோதானே யென்றாள். யாறஞ்சுவலெனவும் இடிகளெறிந்த தெனவும் ஆறுபார்த்துற்ற அச்சங்கூறினாள். இவற்றான் இரவுக்குறி இடையீடுபட்டமையின் வரைந்தெய்துக வென்றவாறு. மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் - இரவுக்குறி விலக்கி வரைவுடம்படுத்தல்.

    (பெரு - ரை.) இஃது ஆற்றது தீமை கூறி இரவுக்குறி விலக்கியது; புலாவும் சிறுகுடி என்றும் பாடம்.

(114)
  
    திணை : பாலை.

    துறை :இது, பிரிவிடையாற்றாளாய தலைமகளைத் தோழி பருவங்காட்டி வற்புறுத்தியது.