பக்கம் எண் :


198


    (து - ம்,) என்பது, வினைவயிற் பிரிந்து சென்ற தலைமகன் குறித்த பருவத்து வாராமையால் வருந்திய தலைவியைத் தோழிநோக்கி 'அவர் குறித்த கார்ப்பருவம் இப்பொழுதுதான் தொடங்குகின்றது; காதலர் சேய்மைக் கண்ணே அயல்நாட்டிலிருப்பவராயினும், நம்மீது மிகு பேரன்புடையராதலின் தவிராது வருவர் நீ வருந்தாதே'யென வலியுறுத்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனால் (தொல். கற். 9) அமைத்துக் கொள்க.

    
மலர்ந்த பெய்கைப் பூக்குற்று அழுங்க 
    
அயர்ந்த ஆயங் கண்ணினிது படீஇயர் 
    
அன்னையுஞ் சிறிதுதணிந்து உயிரினள் இன்னீர்த் 
    
தடங்கடல் வாயில் உண்டுசில் நீரென 
5
மயிலடி இலைய மாக்குரல் நொச்சி 
    
மனைநடு மௌவலொடு ஊழ்முகை அவிழக் 
    
காரெதிர்ந் தன்றாற் காலை காதலர் 
    
தவச்சேய் நாட்டர் ஆயினும் மிகப்பேர் 
    
அன்பினர் வாழி தோழி நன்புகழ் 
10
உலப்பின்று பெறினும் தவிரலர் 
    
கேட்டிசின் அல்லனோ விசும்பின் றகவே. 

    (சொ - ள்.) தோழி வாழி மலர்ந்த பொய்கைப் பூ குற்று அழுங்க அயர்ந்த ஆயம் இனிது கண்படீஇயர் - தோழீ! வாழி அகன்று விரிந்த பொய்கையின் கண்ணுள்ள மலர்களைக் கொய்து வந்த துவட்சியால் வருந்திய தோழியர் குழாமெல்லாம் தம் மெய்ந்நோவொழிந்து இனிதாக வுறங்கவேண்டி; அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் - அன்னையும் நம்மீதுகொண்ட சினம் சிறிது தணிந்து உயிர்ப்புடையளாயினாள்; கார் இன் நீர் தடங்கடல் நீர் சில் என வாயில் உண்டு- அவள் அங்ஙனமாகிய பொழுது முகிலும் இனிய நீரையுடைய பெரிய கடலின் நீர் சில என்னும் படியாக வாயினாலுண்டு; மயில் அடி இலைய மா குரல் நொச்சி மனை நடு மௌவலொடு ஊழ்முகை அவிழ காலை எதிர்ந்தன்று - மயிலின் அடிபோன்ற கரிய கதிராகிய பூந்துணரையுடைய நொச்சி வேலியின்மீது இல்லின் நடுமுற்றத்தில் முளைகொண்டெழுந்த முல்லை கூரை மேலாலே சென்று படர்ந்து அவ்விரண்டும் முறையே அரும்பவிழ்ந்து மலருமாறு இன்று நாட்காலை எதிர்போந்து கார்ப்பருவம் செய்யலாகியது கண்டாய், அஃது அங்ஙனமாக; காதலர் தவச் சேய் நாட்டர் ஆயினும் - இப்பொழுது நங்காதலர் மிக்க சேய்மையின் கண்ணதாகிய நாட்டில் உறைபவராயினும்; மிக பேர் அன்பினர் உலப்பு இன்றுநன் புகழ் பெறினும்