பக்கம் எண் :


199


தவிரலர் - நம்பால் மிகப் பெரிய அன்புடையராதலின் அங்கே தாங்கொண்ட வினை முடித்தலால் அளவில்லாத புகழையடைவதாயினும் குறித்த பருவவரவின்கண் வாராது ஆண்டுறைபவரல்லர், அவர் வருமளவும் நீ வருந்தாதே கொள்!; இன்று விசும்பு அகவு கேட்டிசின் அல்லனோ - இன்றுதான் பருவந் தொடங்குகின்ற தென்பதன் குறியாக அம்மேக முழங்கு மிடியோசையை யான் கேளாநின்றேனல்லனோ? எ - று.

    (வி - ம்.) மலர்தல் - விரிதல். குறுதல் - பறித்தல். உயிரினள் சினமடங்குழிப் பெருமூச்சு விடுதலுடையளாயினாள்.

    நமது நிலையிலா இன்பத்தை மேற்கொண்டு நிலைத்த புகழையும் விரும்புகிலரெனத் தவப்பேரன்பினரென்பதனை வலியுறுத்தினாளென்பது.

    இறைச்சி :- புறத்துள்ள நொச்சிவேலியின்மீது மனையகத் தெழுந்த மௌவல் சென்று படர்ந்து இரண்டும் மலராநிற்குமென்றது, அயனாட்டு அரசகுமாரனாகிய நின்காதலனொடு ஈண்டிம் மனையகத்துப் பிறந்த நீ சென்று கூடிமணந்து இருவரும் ஒருதன்மையான மகிழ்ச்சியீராய் மக்களொடு மகிழ்ந்து மனையறங்காத்து வைகுவிர் என்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

    (பெரு - ரை.) பொய்கை மலர்ந்த பூக்குற்று என மாறிப் பொய்கையின்கண் மலர்ந்த மலர்களைக் கொய்து எனினுமாம். இன்னீர் என்புழி காட்சிக்கினிய நீர் என்க. நொச்சியும் மௌவலும் முகையவிழ என்பது கருத்து. மனைநடு மௌவல் என்றது மனையின்கண் நட்டு வளர்க்கும் முல்லை என்றவாறு; உரையாசிரியர் இங்ஙனம் கூறாமல், நொச்சி வேலியின் மீது இல்லின் நடு முற்றத்தில் முளைகொண்டெழுந்த முல்லை கூரைமேலாலே சென்று படர்ந்து எனப் பெரிது இடர்ப்பட்டுரை கூறுதல் காண்க. விசும்பின் தகவு எனக் கண்ணழித்து அதற் கேற்ப வுரைப்பினுமாம்.

(115)
  
116. கந்தரத்தனார்
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவி, தோழிக்கு வன்பொறை எதிரழிந்து சொல்லியது.

    (து - ம்,) என்பது, தலைவன் மணஞ்செய்துகொள்ளாது நீட்டித்ததனாலே தலைவியது ஆற்றாமையறிந்து அவர் வந்தெய்துவராதலின் நீ வருந்தாதே வலிந்து பொறுத்திருவென்ற தோழியை நோக்கி, 'அவள் நம் காதலன் நம்பால் வைத்த நட்பானது தொடர்பின்றி அறவொழிந்தபின்னும் அயன்மாதர் என்னை அலர் கூறுவ தொழிந்தாரிலர்; அதனை யெங்ஙன மாற்றுவே" னென்று எதிரழிந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "அருமை செய்து அயர்ப்பினும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.