பக்கம் எண் :


210


நிரம்பிய வரகின் கவைத்த கதிர்களைத் தின்ற கண்டார்க்கு விருப்பம் வருகின்ற இளைய பிணை மான்; அரலை அம் காட்டு இரலையொடு வதியும் புறவிற்று - மரல் வித்துக்கள் உதிர்ந்து கிடக்கும் அழகிய காட்டின்கண்ணே கலையொடு மகிழ்ந்து விளையாடாநிற்கும் இப் புறவத்தின்கணுள்ளது கண்டனையாதலின் விரையச் சென்று இன்னே காணுமாறு கதுமெனத் தேரைச் செலுத்துகிற்பேன் காண்!; எ - று.

     (வி - ம்.) முதையல்-பழங்கொல்லை. அரலை-மரல்விதை. பிறக்கு: அசை நிலை யிடைச்சொல். 'வேந்துவிட்டன்று' என்றதனாலே தலைவன் வினைவலபாங்க னாயினமையறிக. கண்டனையாதலினென்பது முதற்குறிப்பெச்சம்.

     இறைச்சி :- :- கவைக்கதிர்கறித்த பிணை காட்டின்கண் இரலையொடு வதியுமென்றது, நின் செல்வத்தைத் துய்க்குந் தலைவி நின்னொடுகலந்து மனையகத்து இனி இன்புற்று வதியாநிற்கு மென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - பாகன் தேற்றத் தேறுதல்.

     (பெரு - ரை.) இது தலைவன் நிலையுணர்ந்து அவனும் மருளும்படி தேரினை நனி விரைந்து செலுத்தி வந்த பாகன் மிக விரைவில் தலைவி இருக்கின்ற புறவினை எய்திய பொழுது பெருமானே கவலற்க! இதுதான் நின் காதலி உறையும் புறவு என்று கூறி அவனை மகிழ்வித்தது என்க. பாகர் அவ்வாறு வியத்தகு முறையில் தேர் செலுத்துதல் உண்டென்பதை "புள்ளியற் கலிமா உடைமையான" என்னும் தொல்காப்பியர் மொழியானும், ஒரு தலைவன் தன் பாகன் தேர் செலுத்திய விரைவில் மருண்டு,

  
"புரிந்த காதலொடு பெருந்தேர் யானும் 
  
 ஏறிய தல்லது வந்த ஆறும் 
  
 நனியறிந் தன்றோ இலனே 
  
 இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே 
  
 வான்வழங் கியற்கை வளிபூட் டினையோ 
  
 மானுரு வாகநின் மனம்பூட் டினையோ 
  
 உரைமதி வாழியோ வலவ" 

என்று கூறும் வியப்புரையானும் உணர்க! (தொல். கற். 53 நச்-உரை மேற்கோள.்)

    எனவே இனி நீ இரங்கி எம்பெருமாட்டியைக் கண்டு மகிழ்ந்தருள்க! என்பது குறிப்பெச்சமாகக் கோடலே சிறப்பு என்க.

(121)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, சிறைப்புறமாகத் தோழி தலைவிக்குரைப்பாளாய்த் தலைவன் கேட்பச் சொல்லியது.