பக்கம் எண் :


216


    
இரைதேர் எண்கின் பகுவாய் ஏற்றை 
    
கொடுவரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி 
    
நல்லரா நடுங்க உரறிக் கொல்லன் 
    
ஊதுலைக் குருகின் உள்ளுயிர்த்து அகழும்  
5
நடுநாள் வருதல் அஞ்சுதும் யாமென 
    
வரைந்துவரல் இரக்குவம் ஆயின் நம்மலை 
    
நன்னாள் வதுவை கூடி நீடின்று 
    
நம்மொடு செல்வர்மன் தோழி மெல்ல 
    
வேங்கைக் கண்ணியர் எருதெறி களமர் 
10
நிலங்கண்டு அன்ன அகன்கண் பாசறை 
    
மென்தினை நெடும்போர் புரிமார் 
    
துஞ்சுகளிறு எடுப்புந்தம் பெருங்கல் நாட்டே. 

     (சொ - ள்.) தோழி இரை தேர் எண்கின் பகுவாய் ஏற்றை கொடு வரிப் புற்றம் வாய்ப்ப - தோழீ! தனக்கு வேண்டும் இரையை நாடுகின்ற அகன்ற வாயையுடைய ஆண்கரடி வளைந்த வரிகளையுடைய புற்றுக் கிடைத்தலும்; வாங்கி நல் அரா நடுங்க உரறிக் கொல்லன் ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அகழும் - அதனைப் பெயர்த்து அதன்கண்ணே உறைகின்ற நல்லபாம்பு நடுங்குமாறு முழங்கி இரும்புசெய் கொல்லன் ஊதுகின்ற உலை மூக்கே போல உள்ளே பெருமூச்செறிந்து பறிக்காநிற்கும்; நடு நாள் வருதல் யாம் அஞ்சுதும் என வரைந்து வரல் இரக்குவம் ஆயின் - இரவு நடுயாமத்தில் நீயிர் வருதலையறிந்து யாம் அஞ்சுகின்றோமென்று கூறி இனி வரைந்து எய்தும்படி இரந்து கேட்போமாயின்; நம் மலை நீடின்று நல் நாள் வதுவை கூடி - நமது மலையின்கண்ணே நாள்நீட்டியாது நல்ல நாளில் நம்மை மணம் புரிந்துகொண்டு; வேங்கைக் கண்ணியர் எருது ஏறி களமர் நிலம் கண்டு அன்ன அகன்கண் பாசறை - வேங்கை மலர் மாலை சூடுகின்ற குறவர் எருதையோட்டிக் கதிர்ப் போரடிக்கும் மருதநில மாந்தர் களம் செப்பஞ் செய்தாற் போன்ற அகன்ற இடத்தையுடைய பசிய கற்பாறையிலே; மெல்தினை நெடும் போர் புரிமார் - மெல்லிய தினையைத் துவைத்து அதன் தாளை நெடிய போராக விடும் பொருட்டு; துஞ்சு களிறு எடுப்பும் - வைகறையிலெழுமாறு துஞ்சுகின்ற களிறு முழங்கி எழுப்பாநிற்கும்; தம்பெருங்கல் நாட்டு மெல்ல நம்மொடு செல்வர் மன் - தமது பெரிய மலை நாட்டகத்தே நம்மொடு மெல்லச் செல்வார்காண்!; எ - று.

     (வி - ம்.) எண்கினேற்றை - ஆண்கரடி. உரறல் - முழங்கல். குருகு - உலை மூக்கு. மன் - ஆக்கம். நெற்களத்தே சேரலாற் களமரென்றார். நடுநாள் வருதலஞ்சுது மென்றது அவன் புணர்வுமறுத்தல்.