(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனாலே தூதாக விடுக்கப்பட்ட பாணன் தலைவியி னூடலைத் தணிக்கும்படி வந்ததறிந்த தோழி, அவனை நோக்கி எங்கள் தலைவி அவனை யல்லாமலே தன் பாவையை வைத்து விளையாடுதற்குக் கழிக்கரைச் சோலையின்கண்ணே செல்லுவா மென்கின்றாளாதலால், அவன் இனி நமது பாக்கத்தில் வருதலால் யாது பயனென மறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும்" (தொல். கற். 9) என்னும் விதியினால் அமைத்துக் கொள்க.
| இருங்கழி துழைஇய ஈர்ம்புற நாரை |
| இறகெறி திவலையிற் பனிக்கும் பாக்கத்து |
| உவன்வரின் எவனோ பாண பேதை |
| கொழுமீன் ஆர்கைச் செழுநகர் நிறைந்த |
5 | கல்லாக் கதவர் தன்னையர் ஆகவும் |
| வண்டல் ஆயமொடு பண்டுதான் ஆடிய |
| ஈனாப் பாவை தலையிட்டு ஓரும் |
| மெல்லம் புலம்பன் அன்றியுஞ் |
| செல்வாம் என்னுங் கான லானே. |
(சொ - ள்.) பாண பேதை கொழுமீன் ஆர்கைச் செழுநகர் நிறைந்த கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும் - பாணனே! எம் பேதையானவள்