பக்கம் எண் :


220


கொழுவிய மீனை யுண்ணுதலையுடைய செழுமையுற்ற மாளிகையில் நிறைந்த தன் ஐயன்மார் தமது தொழிலன்றி ஏனைய ஒன்றுங் கல்லாத சினமுடையராயிருப்பவும்; பண்டு ஆயமொடு தான் வண்டல் ஆடிய ஈனாப் பாவை தலையிட்டு - பண்டு தோழியரோடு தான் வண்டல் விளையாட்டு அயர்தற்குத் தான் ஈனாது வைத்த பாவை தலைக்கீடாகக் கொண்டு; மெல்லம் புலம்பன் அன்றியும் கானலான் செல்வாம் என்னும் - அந்த மெல்லிய கடற்கரைச் சேர்ப்பனை அல்லாமலும் கழிக்கரைச் சோலையின்கண் விளையாடச் செல்வோமாக என்று கூறாநிற்பாள்; இருங் கழி துழைஇய ஈர்ம்புற நாரை இறகு எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து - அதனால் கரிய கழியிலே இரை தேடித் துழாவிய ஈரிய புறத்தையுடைய நாரை தன் சிறகை உதறுகின்ற திவலையாலே குளிர்ந்து நடுங்குகின்ற நமது பாக்கத்தில்; உவன் வரின் எவன் - அந்த மெல்லம்புலம்பன் வருதலால் யாது பயனோ? ஆதலின் அவன் இனி வரற்பாலன் அல்லன்காண்! எ - று.

     (வி - ம்.) வண்டல்-வண்டற் புழுதியாலே சிற்றில்கோலிச் சிறுசோறட்டு மகளிர் விளையாடும் விளையாட்டு. ஈனாப்பாவை - தான் பெறாது கோரையாலே செய்துவைத்துத் தன் மகவென முறைமை பாராட்டும் பாவை. ஓரும்: அசை. ஐயர் கதவராகவுமென மாறிக் கூட்டுக.

    ஈனாப்பாவை தலையிட்டெனவே விளையாட்டயரு மங்கைப்பருவமும் நீங்காத தலைவியைக் கைவிட்டகன்றமை குறிப்பித்து மறுத்ததாம். தன் ஐயன்மார் கல்லாக்கதவரென்றது அவரிடை அகப்பட்டிருந்தும் பண்டு களவிலே தலைவனுக்குச் செய்த நன்றியை அவன் மறந்தனனென் பதுங்காட்டி மறுத்ததாம்.

     உள்ளுறை :-:- கழியிலளைந்த நாரை இறகையுதறுதலாலுண்டாகிய நீர்த்துளி பாக்கத்தின்கண்ணே சென்று தெறித்துக் குளிர்ச்சியால் நடுக்கஞ் செய்யுமென்றது பரத்தையிற் புணர்ந்த தலைவன் 'யான் அங்கவர் யாரையு மறியேன்' என்று கூறிய பொய்ம்மொழி எம் பாக்கமெங்கும் பரந்து எமக்கு நடுக்கத்தை யுண்டாக்கியதென்றதாம்.

    மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயின் மறுத்தல்.

     (பெரு - ரை.) நாரை இற எறி திவலையின் என்றும் பாடம். இதற்கு நாரை இறாமீனை எறிதலாலுண்டான திவலையின் என்று பொருள் கூறுக.

    பொழில் விளையாட்டிற்கு எம் பெருமாட்டி மிகப் பெரிதும் அவாவுடையளாயிருந்தும் நம் பெருமானோ அவளைத் தனியே விடுத்துப் பரத்தையரோடு ஆடுவானாயினன். அவளோ அக் கொடுமையாற்றாது இனி யாம் பண்டு நந் தந்தை இல்லத்துப் பாவை கொண்டு பொழிலில் ஆடினாற்பேல இப்பொழுதும் ஆடுவாம் என்று ஏங்குவாளாயினள் என்பது கருத்து.

(127)