பக்கம் எண் :


22


புலவி உள் கொள்ளல் - இனித் திண்ணமாக அவர் நம் பால் வருவாரல்லர் என்னும் புலவியை உட்கொள்ளாது; நின் நெஞ்சத்து ஒழிக - நின் நெஞ்சத்து அதனை ஒழிப்பாயாக! புணரி பொருத பூ மணல் அடைகரை - அலைவந்து மோதிய இளமணல் அடுத்த கடற்கரையின் கண்ணே; ஆழி மருங்கின் அலவன் ஓம்பி வலவன் வள்பு ஆய்ந்து ஊர - தாம் ஊர்ந்து வருகின்ற தேரின் ஆழியிடத்துப் படாதவாறு ஞெண்டுகளை விலக்கிப் பாகன் வாரைப் பிடித்து ஆராய்ந்து செலுத்துமாறு, கானலான் நிலவு விரிந்தன்று - கானலிடத்து நிலவு விரிந்தது காண்! எ - று.

     (வி - ம்.) சாயினை - இளைத்தனை. மாள : முன்னிலையசை. வள்பு - வார். மாவின் வலப்புறத்தே தன் பொறைகொளவிருத்தலின் வலவனெனப்பட்டான்.

நொதுமல் ஏர்பு உரை - அலாறிவுறுத்தல். மெய்சாயினையென்றது உடம்புநனி சுருங்கல். வாராரென்னும் புலவியுட்கொளலென்றது பொய்யாக் கோடல். அவர் செய்குறி பிழைப்பவென்றது அக்குறியையறிந்து உடனே புறம்போகாதவாறு அன்னை துயிலாமை முதலிய காப்புமிகுதி யறிவுறுத்தல். அலவனுக்கு ஊறுபடாதவாறு தேர் செலுத்தப்படு மென்றது நீ பழிச்சொல்லால் வருந்தாதபடி வரைந்து இல்லற நிகழ்த்தற் கொருப்படுவா னென்றவாறு. இவற்றைக் கேட்ட தலைமகன் வரையக் கருதுமென்றதாம். மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

    (பெரு - ரை.) நொதுமலர் நேர்புரை என்றும் பாடம். இதற்கு அயலோர் வாய் நேர்ந்து கூறும் பழிச்சொல் என்க. கானலான்: வேற்றுமை மயக்கம், நிலவு விரிந்தன்று என்றது இரவுக் குறிக்கண் நீ தேரூர்ந்து வந்தாயாயினும்யாங்கள் தாய் முதலியோர் அறியாவண்ணம் குறியிடம் சேர்தற்கும் நிலவு வெளிப்படுதலாகிய இடையூறுளதாதல் அறிக எனத் தலைவனுக்குக் காப்பு மிகுதியும் இடையூறும் கூறியவாறாதல் உணர்க. வரைவு முடுக்குதல் பயன் என்க.

(11)
  
     திணை : பாலை.

     துறை : இது, தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது.

     (து - ம்.) என்பது, கொண்டுதலைக் கழியுமாறு உடன்படுத்திய தோழி செவிலியுழைச்சென்று அறத்தொடு நிற்றலாலே பெரிதும் மாட்சிமைப்பட்டுக் காட்டலும் இவள் நீரில்லாத ஆற்றிடைப்போய் வருந்துங் குறை யென்னை யென்று தலைமகளைச் செலவழுங்குவித்துத் தலைமகனிடஞ் சென்று, 'தலைவி நின்பால்வர உடன்பட்டும் தன் சிலம்பு முதலியவற்றைக் கழற்றி வைக்கும்பொழுது இவற்றைக் காண்டலும் தோழியர் நோவரென்று ஆயத்தாரைப் பிரிதலாலே வருந்தி நின்றனள்' என அவன் செலவழுங்குமாறு கூறாநிற்பது.