(து - ம்.) என்பது, தலைமகன் மணம்புரியவேண்டிப் பொருளீட்டுதற்குப் பிரிந்து சென்று நீட்டித்தலும் அதனையாற்றாது தலைவி வருந்துவது கண்ட தோழி அவர் விரையவருவாராதலின் நீ வருந்தாதே யென்றாளை நோக்கி நீ கூறுகின்ற மொழியினால், என்னெஞ்சின் கணெழுந்த காமத்தீயானது சிறிது தணிவதுண்டுபோலுமென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்னும் விதி கொள்க.
| தோளே தொடிகொட்பு ஆனா கண்ணே |
| வாளீர் வடியின் வடிவிழந் தனவே |
| நுதலும் 1 பசலை பாயின்று திதலைச் |
| சில்பொறி அணிந்த பல்காழ் அல்குல் |
5 | மணியேர் ஐம்பால் மாயோட் கென்று |
| வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்ற |
| நாமுறு துயரஞ் செய்யலர் என்னும் |
| காமுறு தோழி காதலம் கிளவி |
| இரும்புசெய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த |
10 | தோய்மடற் சின்னீர் போல |
| நோய்மலி நெஞ்சிற்கு ஏமமாஞ் சிறிதே. |