பக்கம் எண் :


231


    (சொ - ள்.) காமுறு தோழி திதலைச் சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல் மணி ஏர் ஐம்பால் மாயோட்கு - என்பால் விருப்ப மிக்க தோழீ! தித்தியின் சிலவாய புள்ளிகளமைந்த பலவாய வடங்களையுடைய காஞ்சி யணிந்த அல்குலையும் நீலமணி போன்ற கூந்தலையும் உடைய இம் மாமை நிறம் உடையாட்கு; தோள் தொடி கொட்பு ஆனா கண் வாள் ஈர் வடியின் வடிவு இழந்தன நுதலும் பசலை பாயின்று என்று - தோள்கள் தாம் அணியப் பெற்ற வளை சுழன்று கழலுதலை நீங்கிற்றில, கண்களும் வாளாற் பிளந்த மாவடுப் போன்ற வடிவை இழந்தன நெற்றியும் பசலை பரவியது என்று; வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்ற - கொடிய வாயையுடைய ஏதிலாட்டியர் பழிச்சொல் எடுத்துத் தூற்றாநிற்கும்படி; நாம் உறு துயரம் செய்யலர் என்னும் காதல் அம் கிளவி - நங் காதலர் அச்சமிகுகின்ற துன்பத்தை நமக்குச் செய்குபவர் அல்லர் ஆதலால் அவர் விரைய வருகுவர் என்று நீ என்னைத் தேற்றிக் கூறுகின்ற என்பால் அன்பு மிக்க இச் சொல்லானது; இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தெளித்த மடல் தோய் சில் நீர் போல - இரும்பு வேலை செய்கின்ற கொல்லன் தான் வெய்ய உலையிலே தெளித்த பனைமடலாலே தோய்த்தலையுடைய சிலவாய நீர் அவ்வுலை நெருப்பைச் சிறிது அவிக்குமாறு போல; நோய் மலி நெஞ்சிற்கு சிறிது ஏமம் ஆம் - காமநோய் மிக்க என் நெஞ்சில் அந் நோயைச் சிறிது தணித்து எனக்குப் பாதுகாவலராயிராநின்றது காண் ! எ - று.

    (வி - ம்.) கொட்பு - சுழற்சி. வடி - மாவடுவுக்கொரு பெயர், காழ் - இரு நான்கு கொத்துக்கொண்ட காஞ்சியென்னும் அணியுமாம். நாம் - அச்சம். மடல் - பனைமட்டைக்காம்பு. ஏமம் - காவல். பசலை பாயின்று என்றது, பசலை பாய்தல். தோள் தொடி கொட்பானாவென்றது, உடம்பு நனிசுருங்கல்; மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.) தோழீ! பெண்டிர் தூற்ற (நங்காதலர்) துயரம் செய்யலர் என்று கூறி நீ வற்புறுத்தும் கிளவி கொல்லன் உலையிற்றெளித்த நீர்போல (என்) நெஞ்சிற்குச் சிறிது ஏமம் ஆகும் என இயைத்துக் கொள்க.

(133)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இஃது, இற்செறிப்பாரென ஆற்றாளாய தலைவியை, அஃதிலரென்பதுபடத் தோழி சொல்லியது.

    (து - ம்,) என்பது, பகற்குறியின்கண்ணே தலைவன் பிரிந்து நீடித்தலால் அது பொறாது வேறுபட்ட தலைவி நமது வேறுபாட்டையறிந்து இல்வயிற் செறிப்பார்போலுமென் றஞ்சியவிடத்து அதனையறிந்த