பக்கம் எண் :


242


5
பெருங்கண் ஆயம் உவப்பத் தந்தை 
    
நெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்துப் 
    
பந்தொடு பெயரும் பரிவி லாட்டி 
    
அருளினும் அருளாள் ஆயினும் பெரிதழிந்து 
    
1பின்னிலை முனியல்மா நெஞ்சே என்னதூஉம் 
10
அருந்துயர் அவலந் தீர்க்கும் 
    
மருந்துபிறிது இல்லையான் உற்ற நோய்க்கே. 

    (சொ - ள்.) மா நெஞ்சே கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த - எனது பெருமையுற்ற நெஞ்சமே! நீரை முகந்து கொள்ளுதலையுடைய கரிய மேகம் மேல்பாலுள்ள மலையிலே எழுந்து மழை பெய்து தழையச் செய்த; சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம் - சிறிய கிளைகளிலே பூங்கொத்துக்களையுடைய பெரிய குளிர்ச்சி பொருந்திய சந்தனமரத்தின் குறையோடு; வகை சேர் ஐம்பால் தகை பெற வாரி - பலவாய பொருள்களையும் சேர்த்து அமைக்கப்பெற்ற சாந்தம்பூசிய கூந்தலை அழகு பெற வாரி; புலர்விடத்து உதிர்த்த துகள்படு கூழைப் பெருங் கண் ஆயம் உவப்ப - அச்சாந்தம் காய்ந்தவழி உதிர்க்கப்பட்ட துகள் பொருந்திய ஐவகையாக வகுக்கப்பட்ட கூந்தலையும பெரிய கண்ணையுமுடைய தோழியர் மகிழுமாறு; தந்தை நெடுந்தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து - தன் தந்தையின் நெடிய தேர் இயங்குகின்ற நிலவு போன்ற வெளிய மணல் பரவிய முன்றிலின்கண்; பந்தொடு பெயரும் பரிவு இல்லாட்டி - விளையாடும் வண்ணம் பந்தோடு செல்லுகின்ற நம்பால் அன்பில்லாத இளமகள்; அருளினும் அருளாள் ஆயினும் - நம்மை அருள் செய்தாலும் அங்ஙனம் அருள்செய்யாளாய் அகன்று போனாலும்; பெரிது அழிந்து பின்னிலை முனியல் - நீ பெரிதும் மனமழிந்து இரந்து வழிபட்டு நிற்றலை வெறாதே கொள்; யான் உற்ற நோய்க்கு அருந்துயர் அவலம் தீர்க்கும் மருந்து பிறிது என்னதூஉம் இல்லை - யான் அடைந்துடைய காமநோயொடு கலந்த துன்பமாகிய அவலத்தை ஒழிக்குமருந்தாவாள் அந்த அன்பில்லாத இளமகள் ஒருத்தியேயன்றி வேறொன்று சிறிதளவேனும மருந்தாகும் தன்மையதில்லைகாண்! எ - று.

    (வி - ம்.) கொண்டல் - கொள்ளுதல் என்னும் பொருளது. ஏர்பு - எழுச்சி. குழைத்தல் - தழையச்செய்தல். ஐம்பால் - கூந்தல். என்னதூஉம் - எவ்வளவும். பின்னிலை - வழிபாட்டு நிலை.

    பலபடியாகவும் தான் தோழியை இரந்து குறைகூறுவதை அறிந்திருந்தும் அறியாள்போன்று பந்தொடுசெல்லுதலானே பரிவிலாட்டி என்றான்.

  
 (பாடம்) 1. 
முன்னிலை முனியல்.