(து - ம்,) என்பது, பரத்தையிற்பிரிந்துறை காலை மனைவி பொறையுயிர்த்தமை வெள்ளணியா லறிந்து போந்து பள்ளியிடத்தானாகிய தலைமகன் ஆங்கு ஊடிய தலைமகளை இரந்துபணிந்து பலவாறுணர்த்தலும் உணராளாய் ஊடனீட அவ்வழி தலைமகன் தன்னெஞ்சைநோக்கி யான் இங்கு நின்றாளை 'நீ யார் நின்னை வணங்கி வினவாநின்றேம், நீதானொரு தெய்வமகளோ பிறளொரு மடந்தையோ' வென வினாயபொழுது நகையுங் கண்ணீருந் தோன்றின வாதலின் முயங்குங்குறிப்புடையள் காணென ஆற்றிக் கூறாநிற்பது.
(இ - ம்.)இதனைக், "கைவிடின் அச்சமும்" (தொல். கற். 5) என்னும் விதியினாற் கொள்க.
| ஒள்ளிழை மகளிரொடு ஓரையும் ஆடாய் |
| வள்ளிதழ் நெய்தல் தொடலையும் புனையாய் |
| விரிபூங் கானல் ஒருசிறை நின்றோய் |
| யாரை யோநின் தொழுதனம் வினவுதுங் |
5 | கண்டோர் தண்டா நலத்தை தெண்டிரைப் |
| பெருங்கடல் பரப்பின் அமர்ந்துறை அணங்கோ |
| இருங்கழி மருங்கு நிலைபெற் றனையோ |
| சொல்லினி மடந்தை என்றனென் அதனெதிர் |
| முள்ளெயிற்று முறுவலுந் திறந்தன |
10 | பல்லித ழுண்கணும் பரந்தவால் பனியே. |
(சொ - ள்.) ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய் - ஒள்ளிய அணிகலன்களையுடைய ஆயமகளிருடன் கூடிப் பாவையைக்கொண்டு விளையாடும் விளையாட்டையும் ஆடாது; வள் இதழ் நெய்தல் தொடலையும் புனையாய் - பெரிய இதழையுடைய நெய்தன் மலர் மாலையையும் புனையாது; விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய் - விரிந்த பூவையுடைய கடலருகுள்ள சோலையின்கண்ணே ஒரு பானின்ற மாதே!; கண்டோர் தண்டா நலத்தை - நோக்கினோராலே கெடாத நலத்தினையுடையாய்!, மடந்தை நின் தொழுதனம் வினவுதும் - மடந்தாய்! நின்னை வணங்கி வினவுகின்றேம்; தெள் திரைப் பெருங்கடல் பரப்பின்கண் அமர்ந்து உறை அணங்கோ - தெளிந்த அலையையுடைய பெரிய கடற் பரப்பின்கண் விரும்பியுறைகின்ற நீரரமகளோ?; இருங் கழி மருங்கு நிலை பெற்றனையோ - கரிய கழியருகிலுள்ள இங்கு நிலைமைகெண்டுறைகின்ற வொருமாதோ?; யாரையோ இனி சொல் என்றனென் - வேறியாவளோ இப்பொழுது சொல்லுவாயாக! என்று கூறினேன், அங்ஙனம் கூறுதலும்; அதன் எதிர் முள் எயிற்று முறுவலுந் திறந்தன - அதற்கு விடையாக முட்போன்ற கூரிய பற்களினின்று