(பெரு - ரை.) இச் செய்யுளை ஆசிரியர் இளம்பூரண அடிகளார் இயற்கைப் புணர்ச்சிக்கண் "காமக் குறிப்புண்மை அறிந்த தலைமகன் வேட்கையாற் சார நினைத்தவழித் தலைமகளும் வேட்கைக் குறிப்புடையளாயினும் குலத்தின் வழிவந்த இயற்கையன்மையான் நாணமும் அச்சமும் மீதூர அக்குறிப்பில்லாதாரைப் போல் நின்றவழி அவளை முன்னிலைப் படுத்துக் கூறிய" தென்று கொள்வர். எனவே இதனை "முன்னிலையாக்கல்"
(தொல். கள. 10) என்னுந் துறைக்கு எடுத்துக் காட்டினர்.
கண்டோர் தண்டா நலத்தை என்பதற்குக் கண்டோர் கண்டு கண்டு அமையாமைக்குக் காரணமான பேரழகுடைய என்றுபொருள் கோடல் நன்று.
(155)
திணை : குறிஞ்சி.
துறை :இஃது, இரவுக்குறி மறுத்தது.
(து - ம்,) என்பது, இரவுக்குறிவந்த தலைவனை வரைவுடன்படுத்தவேண்டி அவனை நோக்கி, நீ இரவு வராநின்றனை; எமர்சீற்றதிற்பெரியர்;