(சொ - ள்.) தோழி மலர் கவிழ்ந்து மா மடல் அவிழ்ந்த காந்தளம் சாரலின் - தோழீ! மலர் தலைகவிழ்ந்து பெரிய இதழ் விரிந்த காந்தளையுடைய சாரலின் கண்ணே; ஞால் வாய்க் களிறு பாந்தள் பட்டு என - தொங்குகின்ற வாயையுடைய களிற்றியானை பெரும் பாம்பின்வாய்ப் பட்டதாக; துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல் - சோராத துயரோடு அஞ்சுகின்ற பிடியானை பிளிறும் பேரொலியானது; நெடுவரை விடர் அகத்து இயம்பும் கடுமான் புல்லிய காடு இறந்தோர் - நீண்ட மலையிடத்துள்ள விடரகத்தே சென்று எதிரொலி யெடாநிற்குங் கடிய குதிரையையுடைய கள்வர் கோமான். "புல்லி" என்பவனுடைய வேங்கட மலையிலுள்ள காட்டின்கண்ணே சென்ற நங் காதலர்; தோள் நலம் சா அய் தொல் கவின் தொலைய நல்கார் நீத்தனர் - என் தோளின் அழகு கெட்டு வாடிப் பழைய நலனெல்லாந் தொலையுமாறு என்னைக் கூடி இன்பங் கொடாராய்க் கைவிட்டொழிந்தாரெனக் கூறாநின்றனை!; ஆயினும்-அங்ஙனம் கைவிட்டொழிந்தாராயினும்; குட்டுவன் அகப்பா அழிய நூறிச் செம்பியன் பகல் தீ வேட்டஞாட்பினும் - அவர் சேரலனது கழுமலத்தின் மதில் ஒருங்கழிய இடித்தொழித்துக் கிள்ளிவளவன் அற்றைப் பகலே அவ்வூரைத் தீயின்வாய்ப் பெய்த போரினுங்காட்டில்; மிகப்பெரிது அலர் எழச் சென்றனராயினும் - மிகப் பெரிதாகிய பழிச்சொல்லுண்டாம்படி சென்றனரெனினும்; நட்டனர் நல்குவர் வாழி - என்பால் மிக்க நட்பு வைத்தனர்; ஆதலால், குறித்த பருவத்து வந்து தலையளி செய்வர், ஆதலின் அவர் நீடு வாழ்வாராக!; எ - று.
(வி - ம்.) சாய்தல்-நுணுகல், சாய்த்தொலையவென மாறிக் கூட்டுக. அகப்பா - மதில், ஞாட்பு - போர். விடர் - மலைப்பிளப்பு. நல்குவர் என்றது பாராட்டெடுத்தல், தொல்கவின் தொலையவென்றது, பசலைபாய்தல், தோணலஞ்சா யென்றது, உடம்புநனி சுருங்கல்.
இறைச்சி :- :- களிறு பாந்தளின்வாய்ப் பட்டதாகப் பிடி பிளிறும் பூசல் சென்று விடரகத்து ஒலிக்குமென்றது, தலைவன் பிரிவால் யான் வருந்திய வருத்தம் நோக்கி ஊராரெடுத்த அலர் சேரிசென்று பரவினும் பரவுக என்றதாம். மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - இயற்படமொழிதல்.
(பெரு - ரை.) சாரல் இனம்சால் வயக்களிறு என்றும் பாடம். இனம் சால் வயக்களிறு - தன் இனமாகிய யானைத்திரள் மிக்க வலியுடைய களிற்றுயானை என்க.
(14)
திணை : நெய்தல்.
துறை : இது, வரைவு நீட்டித்தவழித் தோழி தலைமகற்குச் சொல்லி வரைவுகடாயது.