பக்கம் எண் :


280


பரிப்ப - சோணாட்டின்கணுள்ள 'நெடுந்தெரு' என்னும் ஊர்போன்ற அழகு பொருந்திய நெடிய வழியிலே நம்முடைய வீரர் ஆங்காங்குத் தங்கிச் செல்லாநிற்ப; வளை எனக் காந்தள் வள்ளிதழ் கவிகுளம்பு அறுப்ப - வெண்காந்தளின் வளவிய இதழ்கள் சங்கு உடைந்து கிடந்தாற் போலக் கிடக்குமாறு குதிரையின் கவிந்த குளம்பு மிதித்து அறுக்காநிற்ப; தோள் வலி யாப்ப ஈண்டு நம் வரவினை - தோள்களிலே வலி பிணித்து நின்றாற் போல மிக நெருங்கி வருகின்ற நம்முடைய வருகையை; காதல் கெழுமிய நலத்தள் ஏது இல் புதல்வர்க்குக் காட்டிப் பொய்க்கும் - நம்பால் ஆசைமிக்க நலத்தையுடையளாய் யாதுமில்லாத வேறொன்றனைத் தன் புதல்வனுக்குக் காட்டிப் பொய்ம்மொழி கூறி ஆற்றுவித்து மகிழாநிற்கும்; திதலை அல்குல் தேம் மொழியாட்கு - தித்தி பரந்த அல்குலையும் இனிய மொழியையுமுடைய நங் காதலிக்கு; புள் தெள்ளிதின் அறிவுறீஇயின கொல் - நிமித்தங் காட்டும் காக்கையாகிய புள்ளினங்கள் கரைந்து அறியும்படி தெரிவித்தனவோ? இங்ஙனம் மகிழ்ந்திருப்பதற்கு வேறு காரணமில்லையே? எ - று.

    (வி - ம்.) "எந்நில மருங்கிற் பூவும்" (தொல். பொ. 19) என்றதனாலே முல்லையிற் காக்கை கொள்க. முடித்தென ஈண்டு நம் வருகையை மொழியாட்குப் புள்ளறிவுறீஇயனிவோவெனக் கூட்டுக. இறையென்றதனாலே தலைவன் வினைவல பாங்கனென்க.

    அவள் மகிழ்ச்சியுற்றுப் புதல்வனைக் காட்டி ஆற்றுவித்தது கருதி மகிழ்ச்சிக்குக் காரணம் புள்ளறிவுறீஇயினவோவென்றான்; தன் வருகையை இளையர்வந்து கூறுமுன்னே தேர் விரைந்துவந்தமையால் இது பாகனை மகிழ்வித்தவாறு, பறவையின்கிளை இரியவென்றது, தேர் விரைந்துவருகின்ற ஆரவாரத்தால். மெய்ப்பாடு - உவகை. பயன் - மகிழ்தல்.

    (பெரு - ரை.) தலைவன் தலைவியை எய்துஞ் செவ்வியில் அவள் மனையகத்திலிருந்து அழுகின்ற தன் குழந்தைக்கு உதோ உன் தந்தை வந்துவிட்டார் அழாதேகொள்! என்று பொய்கூறி ஆற்றுவித்தலைக் கேட்ட தலைவன் வியந்து பாகனை நோக்கி 'நம் வரவினை ஒரோவழி இவட்குப்'புள் உணர்த்திவிட்டனவோ? என்று மகிழ்ந்து கூறியபடியாம். ஏதில் - ஏது இல்லாத சொல். அது "உதோ உன் தந்தை வருகின்றார்" என்றதென்க. அங்ஙனம் கூறற்கு அவள் காரணம் பெறாமையின் ஏதில் காட்டி என்றான். நெடுந்தெரு அன்ன நேர் கொள் நெடுவழி என்றது, அரசவீதி முதலிய நெடிய தெருப்போன்ற நேரிய நீண்டவழி என்னலே அமையும்.

(161)
  
    திணை : பாலை.

    துறை : இஃது, உடன் போதுவலென்ற தலைவிக்குத் தலைவன் சொற்றது.