பக்கம் எண் :


291


பசலையை; களையா - நீக்குவனவல்ல காண்; ஆதலின் நீ இங்கு நில்லாது மீண்டு செல்வாயாக! எ - று.

    (வி - ம்.)பணிமொழி - மெல்லிய மொழி; இது துனிதீர்க்க வேண்டி இல்லாதனவற்றைப் புனைந்துகொண்டு வணங்கிக்கூறும் பொய்ம்மொழி. பாணி - ஒலி. கோடு - அடித்தண்டு. வண்மகிழ் - பெரியமகிழ்ச்சி. நலனும் வளையும் இழந்தவென மாறிக்கூட்டுக. ஏர் : உவமவுருபு. ஒடு : அடைமொழிப் பொருளது. சினத்தொடு வந்தானென்பது போலக் கொள்க. ஆர்ப்பின், இன் : அல்வழிச்சாரியை. தண்ணந்துறைவன், அம் : சாரியை. விரிக்கும் விழி விரித்தல்.

    தலைமகன் முயங்கித் தலையளி செய்தவழி நீங்குவதன்றி நின்மொழியாலே பசலை நீங்காதென்றாள், அவனளிக்குங் கொடையளவுக்குரிய சொல்லுடையையெனக் கொண்டு பயன்தெரி பனுவலையுடையையென்றாள். இவளது வருத்தத்திற்குப் படுங் கவற்சி தலைவற்கில்லை யென்பது தோன்றப் பாணன் மீதேற்றிப் 'பைதீர் பாண' என்றாள்.

    இறைச்சி :- (1) நாரை கத்துதல் தேர்ப்பாணியின் ஒலிக்கு மென்றது, பாணன் நயந்து கூறுமொழி எமக்கு இடி இடிப்பது போலிருக்கும் என்பதாம்.

    இறைச்சி :- (2) ஞாழலொடு புன்னைப்பூப் பரவி மணங்கமழுங் கானலென்றது, துறைவனுக்குத் தலைவியொடொப்பப் பரத்தை கருதலாயினாளென்பதாம். அன்றி இனி, கானல் இருவகைமலரையும் பெற்றுக் கமழ்தல்போலத் தலைவன் தலைவியையும் பரத்தையையும் ஒப்பக் கருதி ஏற்று மகிழாநிற்குமெனவுமாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயின்மறுத்தல். ஏனைத்துறைக்கும் பொருளொக்கும். அதற்கு மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியின் ஆற்றாமை கூறுதல்.

    (பெரு - ரை.) பாண நின்மொழி குறுமகள் பசப்புக் களையா என இயைத்துக் கொள்க. பயன் தெரி பனுவல் - இன்பம் உணர்தற்குக் காரணமான பாடலுமாம். பை - வருத்தம்.

(167)
  
168. . . . . . . . . . . . . . .
திணை : குறிஞ்சி.

துறை : இது, தோழி இரவுக்குறி மறுத்தது.

    (து - ம்.) என்பது, தலைமகன் இரவுக்குறி வருதலானே ஏதப் பாடுண்டாமாதலின் அதனை விலக்கி மணம்புரிந்து கொள்ளுமாறு கூறக்கருதிய தோழி, தலைவனை நெருங்கி 'நாடனே, இவளுயிர் வருந்தும் வண்ணம் இரவிலே நீ இங்கு வருதல் பண்புடையதன்றுகா'ணென மறுத்துக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.