ஒரு குருவிப் பெடையொடு மற்றொரு சார்பிலே புகுந்து புணர்ந்து அங்கே சிறிதுபொழுது தாழ்த்திருந்து வருதலும் வந்ததனுடைய; செவ்வி நோக்கிப் பேடைநெறிகிளர் ஈங்கைப்பூவின் அன்ன சிறுபல் பிள்ளையொடு - மெய்யிலே புணர்குறி வாய்த்திருப்பதை நோக்கி அதற்குரிய பேடையானது நெறிப்பு விளங்கிய ஈங்கையின் பூவைப் போன்ற சிறிய பலவாகிய பிள்ளைகளுந் தானும் சேரநின்று; குடம்பை கடிதலின் - குடம்பையினுள்ளே புகுதாதபடி தடுத்தலினால்; நனைந்த புறத்தது அயலது கூரல் இருக்கை நெடிது நினைந்து - மழையிலே நனைந்த புறத்தினதாகிப் பக்கத்தில் நடுங்கியிருப்பதை நோக்கி நெடும்பொழுது ஆராய்ந்து; அருளி ஈரநெஞ்சின் தன்வயின் விளிப்பக் கையற வந்த - அருள் கூர்ந்து இரக்கமுற்ற நெஞ்சத்தோடு தன்பால் வருமாறு அழைப்பக் குருவிச் சேவல் செயலற்று வாராநிற்கும்; மையல் மாலை இரீஇய ஆகலின் - மயக்கத்தையுடைய மாலைப்பொழுது வந்திறுத்ததாகலின்; இன் ஒலி யிழந்த தார் அணிபுரவி தண் பயிர் துமிப்ப - இனிய ஒலியிழந்த மாலை அணிந்த புரவி மெல்லிய பயிர்களை மிதியாநிற்ப; பெருவிறல் தேர் வந்தன்று - பெரிய வெற்றியையுடைய தலைவரது தேர் வந்திறுத்தது; இவள் ஆய் நுதல் கவின் உயந்தன்று ஆகும் - இனி இவளது சிறிய நெற்றியில் உள்ள அழகானது பசலையால் உண்ணப்படாது உய்ந்ததாகும்; எ - று.
(வி - ம்.)கூரலிருக்கை - மழையாலுங் குளிராலும் நனைந்து நடுங்கியிருப்பது. விறல் - வெற்றியையுடைய தலைவனையுணர்த்துஞ்சொல். முருகவேளை ""அணிசால் பெருவிறல்"" என்றார் (81) கலியினும். ஆய்நுதல் சிறுநுதல்.
உள்ளுறை :-வேற்றுப்புலத்தொரு பெடையைப் புணர்ந்து மீண்டு வந்த சேவலை அதனுரிய பேடை தன் பிள்ளையொடு சென்று குடம்பையுள்ளே புகுதாவாறு தடுத்துப் பின்பு அச் சேவல் புறத்தே நனைந்து வருந்துவதை நோக்கி இரங்கி அழையா நின்றதென்றது, முன்பு தலைவன் பரத்தையிற் பிரிந்து வருதலையறிந்த தலைவி தன் உழையருடன் சென்று மறுத்துப் பின்பு அவன்புறத்து வருந்திநிற்றலை யறிந்து எதிரேற்றுக் கொண்டனள்; அங்ஙனமின்றி இப்பொழுது எதிர் கொண்டு பணிந்தேற்கற்பாலள் என்றதாம்.
மெய்ப்பாடு - உவகை. பயன் - மகிழ்தல்.
(பெரு - ரை.) உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தே குதிரைமிதித்து வருதலின் அவற்றின் மணி இன்னொலியிழந்தன என்பது கருத்து. பெருவிறல்: அன்மொழித் தொகை. வந்தன்று, உய்ந்தன்று என்பன வந்தது, உய்ந்தது என்ற பொருளைத் தந்தன. அன்சாரியை பெற்றுநின்ற அஃறிணை யொன்றன்பால் இறந்தகால வினைமுற்றுக்கள் இவை.
(181)