பக்கம் எண் :


321


என்னைக் கொலைசெய்யும் வண்ணம் ஆராய்ந்து நன்றாக அறிந்து கொண்டனள்; ஆனா நோயோடு அழிபடர்க் கலங்கி - அங்ஙனம் சூழ்ந்தவளது சூழ்ச்சியிலே பட்டு இன்னும் இறவேனாகி அடங்காத நோயுடனே பலபலவாக எண்ணிக் கழிக்கின்ற துன்ப மிகுதலானே கலக்கமெய்தி; காமம் கைம்மிகக் கையறுதுயரம் காணவும் - காமமானது அளவுகடந்து பெருகுதலானே என் செயலொருங் கழிந்து வருந்துகின்றேன், இங்ஙனம் வருந்தி அழிந்தொழிவதனை நீ கண்ணாலே கண்டுவைத்தும்; நல்காய் ஆயின் - அவளுடன் கூட்டுவிக்கு முயற்சியை நீயே செய்யாதொழியின்; யான் நோகு - அது நின்னால் வந்ததன்று என் ஊழ்வினையால் வந்ததென அவ்வூழினை யான் நோவா நிற்பேன்; எ - று.

    (வி - ம்.)ஆனாமை - அமையாமை; அடங்காமை. படராலே கலங்கியென மூன்றனுருபு விரிக்க. கைம்மிகல் - அளவுகடத்தல். கொல்லிப்பாவை - அம் மலையிலுள்ள தேவரையும் முனிவரையும் துன்புறுத்த வருகின்ற அவுணரும் அரக்கரும் அப் பாவையின் நகையைக் கண்டு மயங்கி உயிர்விடும்படி தேவதச்சனாக்கிவைத்த பெண்வடிவினது. அவுணரும் அரக்கரும் போதருகாலை அவர் வாடைப்பட்டவுடன் தானே நகைசெய்யுமாறு பொறியுள் வைக்கப்பட்டது. அது நகைத்துக் கொல்லுமென்பதனை ""திரிபுரத்தைச், செற்றவனுங் கொல்லிச் செழும்பாவை யுந்நகைக்கக், கற்றதெல்லா மிந்த நகை கண்டேயோ"" (சித்திரமடல்) என்றதனாலுமறிக. அது போன்றவளென்றதனால் என்னையும் குறுநகையால் மயக்குவித்துக் கொலை சூழந்தனளென்க.

    இறைச்சிகள் :- (1) பாணரின் குதிரைக் குளம்பாலே செப்பமாகிய நெறியில் இரவலர் மெலியாதேறுமென்றது; நீ சென்று கண்டு இயைவிப்பின் அந்நெறியே யான் வருந்தாது சென்று கூடுவேனென்றதாம்.

    இறைச்சிகள் :- (2) கொல்லிமலையிலுள்ள காந்தளின் தேனை வண்டு கொணர்ந்து இறாலின்கண் வைக்குமென்றது, என்னறிவு என் நெஞ்சினைப் புகுந்து பற்றிக்கொண்டுபோய் அவள்பாலுய்த்த தறிவாயென்றதாம்.

    மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - பாங்கனை உடன்படுவித்தல்.

    (பெரு - ரை.) யான் நோகோ என மாறி ஓகாரத்தை வினாவாக்கி நீ கண்டு வைத்து நல்காய் ஆயின் யான் நின்னை நொந்து கொள்வேனோ அங்ஙனம் நோவதனாற் பயனென்னை என்றானாகப் பொருள்கோடல் சிறப்பு.

    நல்ல நண்பர் உடுக்கையிழந்தவன் கை போல விரைந்து உதவி செய்தல் இயல்பாகலின் நீயும் அவ்வாறு செய்தல் வேண்டாவோ? என்பது குறிப்பென்க.

(185)