| எல்லிவந் தன்றோ தேரெனச் சொல்லி |
| அலரெழுந் தன்றிவ் வூரே பலருளும் |
| என்னோக் கினளே அன்னை நாளை |
| மணிப்பூ முண்டகங் கொய்யே னாயின் |
10 | அணிக்கவின் உண்மையோ அரிதே மணிக்கழி |
| நறும்பூங் கானல் வந்தவர் |
| வறுந்தேர் போதல் அதனினும் அரிதே. |
(சொ - ள்.) சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் - சிறிய பூவையுடைய ஞாழலின் தேன் பொருந்திய ஒள்ளிய பூங்கொத்துக்கள்; நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த - அழகிய கலன்களையுடைய சிறுமியர் நெடிய மணலில் வண்டலாட்டு அயரும்வழி; வண்டல் பாவையின் - வண்டல் மண்ணாலே செய்த பாவையின்; வனமுலை முற்றத்து ஒண்பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம் - அழகிய கொங்கையில் ஒள்ளிய வரியையுடைய சுணங்குபோல மெல்லிதாகப் படுமாறு பரவாநிற்கும்; கண்டல் வேலிக் காமர் சிறுகுடி எல்லி தேர் வந்தன்றோ எனச் சொல்லி - கண்டல் மரங்களாகிய வேலி சூழ்ந்த கண்டார்க்கு விருப்பம் வருகின்ற சிறிய குடித்தெருவின் கண்ணே நேற்றிரவில் ஒரு தேர் வந்துளதேயன்றோவென உரையாடி; இவ்வூர் அலர் எழுந்தன்று - இவ்வூர் முழுதும் அலரெழுந்ததாக; அன்னை பலர் உளும் என் நோக்கினள் - அவ்வலரைச் செவியில் ஏறட்டுக் கொண்ட நம்மன்னை என் போல்வார் பலருமிருப்ப அவருள் என்னையே குறிப்பாக நோக்கா நின்றனள்மன்; நாளை முண்டகம் மணிப்பூ கொய்யேன் ஆயின் அணிக் கவின் உண்மை அரிது - நாளைக் கழிக்கரையிலுள்ள முள்ளியினுடைய நீலமணி போலும் மலரைக் கொய்யேனாயின் என் மிக்க அழகு உளதாவது அரியதாகும்; மணிக் கழி நறும் பூங் கானல் அவர் வந்து வறுந்தேர் போதல் - இஃதிவ்வண்ணமாக, நீலமணி போலும் கரிய கழியிடத்துள்ள நறிய பூஞ்சோலையில் அவர் வந்து எம்மை யணையாது தேர் மேல் வறிதே செல்லுதல்; அதனினும் அரிது - எம்மை இல்வயிற்செறிக்கும் அதனினுங் காட்டில் அரிய துன்பமுடையதாகும்; எ - று.
(வி - ம்.) ஞாழல் - கடற்கரையிலுள்ளதொரு மரம். கண்டல் - ஒரு மரம். முண்டகம் - கடன்முள்ளி.
பலருள்ளும் யானே தலைவிக்குச் சிறந்த தோழியென அன்னை அறிந்து வைத்தனளென்பதறிவுறுத்துவாள் தன்னையே அன்னை நோக்கினளென்றாள். அங்ஙனம் நோக்கினமையின் இனித் தான் இடைநின்று கூட்டற்கியலாதாதலின் வரைந்தெய்துகவெனக் குறிப்பித்தனளென்பது.