(து - ம்.) என்பது, களவொழுக்கத்து இரவுக்குறி வந்துகூடுந் தலைவனை நோக்கித் தலைவி அவன் இராவருநெறியின் ஏதம்நினைந்து கவன்று இனி நீ இங்ஙனம் வாராதேகொள் என்றாளை, நீ யஞ்சாதொழி, நினது நலனை யான் கருதி வரும்பொழுது நின் மேனியொளியே யாண்டும் வீசி இருளைப் போக்குவதாகத் தோன்றுதலானே, இம் மலையடியிலுள்ள நெறி எனக்கொரு காவலாகியே யிருக்குமெனத் தேற்றிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, ""பண்பிற் பெயர்ப்பினும்"" என்னும் நூற்பாவின்கண் ""ஆற்றிடை யுறுதலும்"" எனவரும் (தொல். கள. 12) விதி கொள்க.
| குருதி வேட்கை உருகெழு வயமான் |
| வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கும் |
| மரம்பயல் சோலை மலியப் பூழியர் |
| உருவத் துருவின் நாள்மேயல் ஆரும் |
5 | மாரி எண்கின் மலைச்சுர நீளிடை |
| நீநயந்து வருதல் எவனெனப் பலபுலந்து |
| அழுதனை உறையும் அம்மா அரிவை |