| பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப் |
| பூதம் புணர்த்த புதிதியல் பாவை |
10 | விரிகதிர் இளவெயில் தோன்றி யன்னநின் |
| ஆய்நலம் உள்ளி வரினெமக்கு |
| ஏமம் ஆகும் மலைமுதல் ஆறே. |
(சொ - ள்.) குருதி வேட்கை உருகெழு வயமான் வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கும் - இரத்தத்தை யுண்ணும் விருப்பத்தொடு அச்சத்தைச் செய்யும் வலிய புலி தன் எதிரே வலிமிக்க பெரிய இளைய களிற்றியானை வருதலை நோக்காநிற்கும்; மரம் பயில் சோலை மலியப் பூழியர் உருவத் துருவின் மாரி நாள் மேயல் ஆரும் எண்கின் - மரங்கள் பொருந்திய சோலை நிரம்பப் பூழியருடைய நல்ல நிறத்தையுடைய யாட்டு மந்தைபோல மாரிக் காலத்து வைகறைப் பொழுதில் மேய்கின்ற கரடிகளையுடைய; மலைச்சுர நீள் இடை நீ நயந்து வருதல் எவன் என - மலைச்சுரத்து நீண்ட நெறியில் நீ என்னை விரும்பி வருதல் என்னை கொல்? என; பல புலந்து அழுதனை உறையும் அம் மா அரிவை - பலவாகப் புலந்துகூறிக் கலுழந்துகொண்டிராநின்ற அழகிய மாமை நிறத்தினையுடைய மடந்தாய்!; பயம் கெழு பலவின் கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிது இயல் பாவை - பயன் மிக்க பலா மரங்களையுடைய கொல்லிமலையினுள் மேல் பாலாக முன்பு தெய்வத்தாலே செய்துவைக்கப்பட்ட புதுவதான நடைகொண்டு இயங்குகின்ற பாவை; விரி கதிர் இளவெயில் தோன்றி அன்ன நின் ஆய்நலம் உள்ளிவரின் - விரிந்த ஞாயிற்றின் இளவெயிலிலே தோன்றி நின்றாலொத்த நினது அழகிய நலத்தைக் கருதி வருங்காலத்து நின்மேனி யொளியே எங்கும் பரவி இருளைப் போக்குவதாகத் தோன்றுதலானே; மலைமுதல் ஆறு எமக்கு ஏமம் ஆகும் - இம்மலையடியிலுள்ள நெறியானது எமக்குக் காவலையுடையதாகும் கண்டாய்; ஆதலின்; நீ அழுதுறைவதை விட்டொழிப்பாயாக!; எ - று.
(வி - ம்.) வயமான் - புலி. துரு - யாடு. ஆய்நலம் - அழகிய இன்பம். ஏமம் - காவல். இவ்வுவமைபோல ""தாவி னன்பொன்தைஇய பாவை, விண்டவழ் இளவெயிற் கொண்டுநின் றன்ன"" என்றார் (212) அகத்தினும்.
தனக்குச் சிறந்தாளென்று தான் கருதியிருப்பதனை அவள் அறிந்து கொள்ளுமாற்றான் நின்னையுள்ளிவரின் ஏமமாகுமென்றான்.
இறைச்சி:- புலி களிற்றைப் பார்க்குஞ் சோலையின்கண்ணே கரடி அஞ்சாது இயங்குமென்றது. அன்னை காவலாயிருக்கும் மனையகத்து யான் அஞ்சாது வரவல்லேனென்றதாம். மெய்ப்பாடு - வீரம். பயன் - தலைமகளை யாற்றுவித்தல்.