(து - ம்.) என்பது, "தலைவியை வேற்றுமாக்கள் மணஞ்செய்து கொள்ள வேண்டி வருவதனையறிந்த தோழி, தன் தாயாகிய செவிலியிடஞ் சென்று "அன்னாய்! முன்பு களவொழுக்கத்திலே கலந்த கேள்வருடைய தேர் வருவது நிறுத்தப்பட இயலாதது; வந்தவர்தாம் வறிதே பெயர்வரோ? நம் இளமகளை வேற்றுவரைவிற் படுத்தினிரேல் கொலைவெய்ய சிறுவர் கைப்பட்டனளேயா"மென முன்பு நிகழ்ந்த களவொழுக்கத்தை வெளிப்படுத்தித் தெளியக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "முன்னிலை அறன் எனப்படுதல் என்றிரு வகைப் புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்" (தொல். கள. 23) என்னும் விதியினாலமைத்துக் கொள்க.
| கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை |
| முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக் |
| கொழுமீன் கொள்பவர் பாக்கங் கல்லென |
| நெடுந்தேர் பண்ணி வரலா னாதே |