5 | குன்றத் தன்ன குவவுமணல் நீந்தி |
| வந்தனர் பெயர்வர்கொல் தாமே அல்கல் |
| இளையரும் முதியருங் கிளையுடன் குழீஇக் |
| கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நாம்பின் |
| முடிமுதிர் பரதவர் மடமொழிக் குறுமகள் |
10 | வலையுந் தூண்டிலும் பற்றிப் பெருங்கால் |
| திரையெழு பௌவம் முன்னிய |
| கொலைவெஞ் சிறாஅர் பாற்பட் டனளே. |
(சொ - ள்.) கழி சூழ் கண்டல் வேலிப் படப்பை - அன்னாய்! கழி சூழ்ந்த கண்டல் மரங்களாலாகிய வேலியையுடைய கொல்லையிடை யமைந்த; முண்டகம் வேய்ந்த குறு இறைக் குரம்பை - முள்ளிச் செடிகளால் வேய்ந்த குறுகிய கூரையையுடைய சிறுகுடில்களையுடைய ; கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல் என் - கொழுவிய மீன் கொள்பவர் உறைகின்ற பாக்கமெங்கும் கல்லென்னும் ஓசை யுண்டாக; நெடுந்தேர் பண்ணி வரல் ஆனாது - நெடிய தேரினைச் சமைத்துக் கொண்டு நம்காதலர் வருவது நிறுத்தப்படுவதொன்றன்று; குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி வந்தனர் பெயர்வர் கொல் - மலைபோன்ற குவிந்த மணற் பரப்பைக் கடந்துவந்த அவர் தாம் வறிதே இனிப் பெயர்வரோ? பெயரார் காண்!; அல்கல் இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇக் கோள் சுறா எறிந்தெனச் சுருங்கிய நாம்பின் முடி - இரவில் இளைஞரும் முதியோரும் தம் உறவினருடன் கூடியிருந்து கொல்லவல்ல சுறாமீன் கிழித்ததனாலே சுருங்கிய நாம்புகளைக் கொண்டு வலையை முடிகின்ற; முதிர் பரதவர் மடமொழிக் குறுமகள் - முதிர்ச்சியையுடைய பரதவரின் மடப்பமிக்க மொழியையுடைய இளமகளான இவள் அவருக்கே யுரியள்; வலையும் தூண்டிலும் பற்றிப் பெருங்கால் திரை எழு பௌவம் முன்னிய - அங்ஙனம் அன்றி வேற்றுவரைவிற் படுத்தினிரேல் வலையையும் தூண்டினையும் பிடித்துப் பெரிய காற்று வீசுதலானே அலையெழுகின்ற கடலின் கண்ணே செல்லுகின்ற; கொலை வெம்சிறார்ப் பால் பட்டனள் - கொலைத் தொழிலையுடைய வெய்ய பரதவர் சிறார்வாய்ப்பட்டொழிந்தனளேயாம்; இனிக் கூறியாவதென்? எ - று.
(வி - ம்.) குறுமகள் சிறார்பாற் பட்டனளெனக் கூட்டுக. இளையரும் முதியருமாகக் கூடிமுடிகின்ற பரதவர். நாம்பு - மெல்லிய கொடி: மெல்லிய நாருமாம். பட்டனளெனத் தெளிவுபற்றி இறந்தகாலத்தாற் கூறினள். இனிக் கூறியாவதென் என்பது சொல்லெச்சம், குறியிறை - குறிய இறப்பு.