(து - ம்.) என்பது, தலைமகன் பொருள்வயிற் பிரிந்தானது குறிப்பறிந்து தலைமகள் வருந்துதலும் அதுகண்ட தோழி "நீ ஏன் வாடுகின்றனை, அவர் செல்பவரல்லர்: செல்லிற் காமநோய் பொறுப்பவருமல்லர், பொருள் முடியாதாயினும் வருவர்காண்: இம்மழைக் குரல் பிரிந்தோரை நாடித் தருவதுபோலு"மெனத் தேற்றிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனால் அமைத்துக் கொள்க.
| விறல்சாய் விளங்கிழை நெகிழ விம்மி |
| அறல்போல் தெள்மணி இடைமுலை நனைப்ப |
| விளிவிலா 1 கலுழுங் கண்ணொடு பெரிதழிந்து |
| எவனினைபு வாடுதி சுடர்நுதற் குறுமகள் |
5 | செல்வர் அல்லர் 2 நங்காதலர் செலினும் |
| நோன்மார் அல்லர் நோயே மற்றவர் |
| கொன்னு நம்பும் குரையர் தாமே |
| சிறந்த அன்பினர் சாயலும் உரியர் |
| பிரிந்த நம்மினும் இரங்கி அரும்பொருள் |
10 | முடியா தாயினும் வருவர் அதன்றலை |
| இன்றுணைப் பிரிந்தோர் நாடித் |
| தருவது போலுமிப் பெருமழைக் குரலே. |
(சொ - ள்.) சுடர் நுதல் குறுமகள் - விளக்குகின்ற நெற்றியையுடைய இளமடைந்தையே!; விறல்சாய் விளங்கு இழை நெகிழ - நின் வலிமையெல்லாம் குறைந்து போய் விளங்கிய கலன்கள் நெகிழாநிற்ப; தெள் மணி போல் அறல் முலையிடை நனைப்ப - முத்துப்போன்ற கண்ணீர்த்துளி கொங்கையினிடையே