வீழ்ந்து அசையா நிற்ப; கலிங்கம் துயல்வர - இடையிற் கட்டிய உடை சரிந்து அசையாநிற்ப; செறிதொடி தெளிர்ப்ப வீசி -நெருங்கிய வளைகள் ஒலிக்கும்படி கைகளை வீசிக்கொண்டு; பூப்போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி மறுகில் சென்றனள் - நீலமலர் போன்ற மையுண்ட கண்கள் நிலைபெயர்ந்து சுழலும்படி நோக்கி எமது மறுகின்கட் சென்றனள்; விளங்கு பூணள் நுண்பல் சுணங்கு அணிவுற்ற - நின்னைப் பிரிதலாலே விளங்கிய பூண்களுடனே நுண்ணிய பலவாய சுணங்கு அணியப் பெற்றவளாய்; மார்பு உறு முயக்கு இடை ஞெமிர்ந்த சோர்குழை - முன்பு நின் மார்பினுற்ற முயக்கத்தில் நெரிந்த சோர்கின்ற குழையையும்; பழம்பிணி வைகிய இணைத்தோள் - நீட்டித்த பிணியுற்ற இரண்டு தோள்களையும்; குழைந்த கோதைக் கொடி முயங்கலள் - துவண்ட மாலையையுமுடைய கொடிபோன்று நின் முயக்கம் நீங்கினவளாகி எமது மறுகின்கட் சென்றனள்; குறுமகள் கண்டிகும் - அத்தகைய இளம் பிராயத்தளாகிய பரத்தையை யாம் கண்டேம்; வாழிய - அவள் நின்னோடு நீடூழி வாழ்வாளாக; எ - று.
(வி - ம்.)மறுகிற் சென்றனளென்பதை இரண்டிடத்துங் கூட்டுக. மகிழ்நன் : முன்னிலையிற் படர்க்கைவந்த வழுவமைதி. [இரண்டாந்துறைக்குப் படர்க்கையாகவே பொருள் கொள்க. அதற்கு ஐய என்பதனை மெல்லிய எனப் பொருள்படுத்துக.] மராங்கமழும் கூந்தல் - பரத்தையைக் காவிற் பூச்சூட்டி விழாவயர்ந்தது கூறிப் புலந்தவாறு, கூந்தலசைவரல் - கூழை விரித்தலென்னு மெய்ப்பாடு. கலிங்கந் துயல்வரல் - உடை பெயர்த்துடுத்தலென்னு மெய்ப்பாடு. தொடிதெளிர்த்தல் - ஊழணி தைவரலென்னு மெய்ப்பாடு. இவை புணர்ச்சியீற்றில் நிகழ்வன : இவற்றைக் கூறவே 'நென்னல் நின்னைப் புணர்ந்த குறிப்பை யாம் நோக்கி யேக்கமுற அக் குறிப்புக்களோடு மறுகில் வந்தா' ளென்று கூறியது. இது பின்னும் புலவி நீட்டத்துக்குத் தலைக்கீடாயிற்று. வாழிய - இகழ்ச்சிக் குறிப்புமாம். தலைவன் தன்பால் வந்தமையால், இங்ஙனங் கூறிப் புலவிதீர்கின்றாளாவது கேட்ட தலைமகன், நம்மாட்டுப் பெரிதுமொரு குற்றங்கண்டும் அருளிப்பாடிட்டமையின் இனிப் பரத்தையைக் கருதலேமெனக் கொள்வானாவது. மெய்ப்பாடு - வெகுளி. பயன் - புலவிதீர்ந்து புணர்ச்சியின் மகிழ்தல்.
(பெரு - ரை.) இனி இரண்டாவது துறைக்கு, அஃதாவது தோழி கூற்றாக்குங்கால்; "வைகி மகிழ்நன் ..... கொடி முயங்கலள்" என்னுந் துணையும் தலைவியின் கூற்றைத் தோழி கொண்டு கூறி இவ்வாறு நீ படைத்துக்கொண்டு நம் பெருமான்பால் அடாப்பழி கூறி ஊடுதற்குக் காரணமான அப்பரத்தை மகள் தானும் ஐய குறுமகள் கண்டிகும் - மெல்லிய சிறுமியே ஆவள் அவளை யாமும் கண்டேங்காண் ! என்று பொருள்கூறி அக் காமஞ் சாலாச் சிறுமியைத் தலைக் கீடாகக்கொண்டு நீ ஊடியிருத்தல் அறிவுடைமையன் றென்பது குறிப்பெச்சமாக்குக. இதனாற் பயன் - தலைவி தன் பிழையுணர்ந்து ஊடல் தீர்தலாம் என்க.
இனி நுண்பல் சுணங்கு அணிவுற்ற விளங்குபூணள் என்று சொற் கிடந்தவாறே பொருள் கோடலே அமையும் என்க.
(20)