(து - ம்.) என்பது, களவொழுக்கத்து இரவுக்குறி வருந் தலைமகனை அங்ஙனம் வாராதபடி தடுத்து மணம்புரிந்து கொள்ளும் வண்ணங் குறிப்பாற் கூறாநிற்பதுமாகும்.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் ............................. அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியால் அமைத்துக் கொள்க.
| குணகடல் இவர்ந்து குரூஉக்கதிர் பரப்பிப் |
| பகல்கெழு செல்வன் குடமலை மறையப் |
| புலம்புவந் திறுத்த புன்கண் மாலை |