(சொ - ள்.) துனி தீர் கூட்டமொடு துன்னாராயினும் - புலவி தணித்துக் கூடுகின்ற கலவியொடு பொருந்தி என்பால் எய்திலராயினும் பலகாலும் முன்பு அவர் மெய்யை நோக்கி மகிழ்ந்துளேனாதலின்; காணுநர்க் காண்புழி வாழ்தல் இனிது - அங்ஙனமாகக் காணுந் தரத்தினரை நோக்கி யிருந்தாலும் உயிரோடு வாழ்வதினியதாகும், அவ்வண்ணம் காணப்பெறேனாதலின் யான் இனி உயிர்வைத்திருப்பதில் யாது பயன்?, கண் உறு விழுமம் கை போல் உதவி நம் உறுதுயரம் களையார் ஆயினும் - கண்ணில் விழுகின்ற நுண்ணிய துகளையும் கை விலக்குமாறு போல நம்மையுற்ற துன்பத்தை நீக்காராயினும்; அவர் இல் ஊர் இன்னாது - அவரில்லாத வூர் இன்னாதாகும், இன்னாதவூரில் யான் இருந்தும் யாது பயன்? ஆதலின் இன்னே துறந்தகலினும் அகலுவன்; குருகு ஆர் கழனியின் கடவுள் காக்கும் எரிமருள் வேங்கை இதணத்து ஆங்கண் - குருகுகள் ஆரவாரிக்கும் வயற் கரையிலே கடவுள் ஏறிய எரிபோன்ற பூவையுடைய வேங்கை மரத்திற்கட்டிய கட்டுப்பரண் அருகிலே; ஏதிலாள் கவலை கவற்ற - அயலான் ஒருவன் செய்ததனாலாய கவலை வருத்துதலாலே; ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக் கேட்டோர் அனையராயினும் - ஒரு கொங்கையை அறுத்த திருமாவுண்ணியைக் கேட்டவர்கள் அத்தன்மையராயினும்; வேட்டோர் அல்லது பிறர் இன்னார் - அவள்பால் அன்பு வைத்தவர் மாத்திரம் வருந்துவரேயன்றிப் பிறர் வருந்துபவரல்லர்; அவ்வாறே தலைவரைப் பிரிந்த தலைவி வருந்துவளாயினும் மிக்க வேட்கையையுடைய யான் வருந்துந்துணை அவள் வருந்துபவளல்லள்; அங்ஙனமே பிறரும் வருந்துபவரல்லர் எ - று.
(வி - ம்.) கண் பரத்தையாகவும,் விழுமம் அவள்கொண்ட காமமாகவும், கை தலைவனாகவும் உவமங்கொள்க. இது வினையுவமம். அவ்வாறேயென்பது முதற் குறிப்பெச்சமும் முன்னுள்ள யாவும் இசை யெச்சமுமாகக் கொள்க. திருமா வுண்ணியென்பது கண்ணகி கதையைக் குறிக்கின்றது போலும்.
துன்னாராயினுமென்ற உம்மையால் ஒருகால் துன்னினுந் துன்னுவ ரெனக்கொண்டு காண்புழி இனிதேயென்றாள். களையாராயினும் என்றதற்கும் அங்ஙனமே ஒருகால் களையினுங் களைவரெனக் கொண்டு அத்தகையார் இல்லாதவூர் இன்னாதென்றாள் எனலுமாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - தலைவி புலத்தல்.
(பெரு - ரை.) ஏதிலாளன் செயலாலே கவலையுற்ற திருமாவுண்ணி என்பாள் ஒரு பரத்தையே ஆதல்வேண்டும், அவள் தான் காதலித்த தலைவன் தன்னைக் கைவிட்ட காரணத்தாலே தனது ஒரு முலையை அறுத்துக்கொண்டனள் என்னும் அச்செயல் கேட்ட பிறரெல்லாம் அவட்கு இரங்கினரேனும் உண்மையாக வருந்தினாரிலர் ஆகலின், என் வருத்தத்தைக் கேட்டவரெல்லாம் அத் திருமாவுண்ணியின் வருத்தம்