(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்த தலைமகன் மீண்டுவந்து தலைவி புலந்திருப்பது அறிந்து அப்புலவியைத் தணிக்கவேண்டித் தோழியை விடுப்ப அத் தோழியைத் தலைவிநோக்கி "நம் மலைநாடன் மிக இனியனாயினும் புலவி நீக்கிக்கூடுதல் நல்ல இன்பத்தைத் தருதலால் யான் ஊடுகிற்பேன்கா"ணென வெகுண்டு கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "கொடுமை யொழுக்கம் தோழிக் குரியவை...............வாயிலின் வரூஉம் வகை" (தொல். கற். 6) என்னும் விதி கொள்க.
| இசைபட வாழ்பவர் செல்வம் போலக் |
| காண்டொறும் பொலியுங் கதழ்வாய் வேழம் |
| இருங்கேழ் வயப்புலி வெரீஇ அயலது |
| கருங்கால் வேங்கை ஊறுபட மறலிப் |
5 | பெருஞ்சினந் தணியுங் குன்ற நாடன் |
| நனிபெரிது இனியன் ஆயினுந் துனிபடர்ந்து |
| ஊடல் உறுவேன் தோழி நீடு |
| புலம்புசேண் அகல நீந்திப் |
| புலவி உணர்த்தல் வண்மை யானே. |
(சொ - ள்.) தோழி இசைபட வாழ்பவர் செல்வம் போலக் காண்தொறும் பொலியும் கதழ்வாய் வேழம் - தோழீ! புகழ் மிகும்படி வாழ்கின்றவருடைய செல்வம் பொலிவடைதல் போலக் காணுந்தோறும் பொலிந்து தோன்றுகின்ற விரைந்த செலவினையுடைய களிற்றுயானை; இருங்கேழ் வயப் புலி வெரீஇ அயலது கருங்கால் வேங்கை ஊறுபட மறலிப் பெருஞ்சினம் தணியும் குன்ற நாடன் - தன்னெதிர்நிற்க இயலாது கரிய நிறத்தை உடைய வலிய புலி வெருவியோடுதலாலே அயலிலுள்ளதாகிய கரிய அடியையுடைய வேங்கைமரம் சிதைவுபடுமாறு முறித்துத் தள்ளித் தனது சினந் தணியாநிற்கும் மலைநாடனாகிய