பக்கம் எண் :


376


நம் காதலன்; நனி பெரிது இனியன் ஆயினும் நீடு புலம்பு சேண் அகல நீந்திப் புலவி உணர்த்தல் வண்மையான் - பலகாலும் நம்பால் நிகழ்த்தும் புணர்ச்சியானும் பெருநயப்பு முதலியவற்றானும் மிகப்பெரிதும் இனியனாயிருப்பினும் பிரிவினாலுண்டாகிய நீடிய வருத்த மெல்லாம் தூரத்தே அகன்றுபோகும்படி வந்துகூடி யான் கொண்ட புலவியைப் போக்குமாறு என்னைப் பணிந்துணர்த்தல் முதலாகிய வண்மையைச் செய்தலானே; துனி படர்ந்து ஊடல் உறுவேன் - யான் வருத்தமேற்கொண்டேன் போல ஊடாநிற்பேன்காண்! எ - று.

     (வி - ம்.) கதழ்வு - விரைவு. வெரீஇ என்னுஞ் செய்தெனெச்சத்தை வெருவ என்னுஞ் செயவெனெச்சமாகத் திரித்து ஏதுப்பொருட் டாக்குக.

     பிரிந்த காலத்துத் தான் உற்ற வருத்தம் தலைவனும் படுவதைத் தான் நேரிற் பார்க்க வேண்டுங் கருத்தால் ஊடலுறுவேனென்றாள். அங்ஙனம் ஊடியவழி அவன் உணர்த்தல் இன்பநனிபயப்பதனை "இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல், வல்ல தவரளிக்கு மாறு" (குறள் - 1321) என்றதனானும் அறிக.

     உள்ளுறை: களிற்று யானை தன்னிடத்துப் புலி யஞ்சியோடுதலாலே தான்கொண்ட சினத்தை அயலிலுள்ள வேங்கையை மோதித் தணியாநிற்கும் என்றது, தலைவி கொண்ட புலவிக்குத் தலைவன் அஞ்சியகலுதலாலே அவன்பாலுற்ற பரத்தைமையை இகழ்ந்துகூறி அச் சினம் தணியாநிற்கும் என்றதாம். மெய்ப்பாடு - வெகுளி, பயன் - வாயின் மறுத்தல். இது நிலத்தாற் குறிஞ்சி.

     (பெரு - ரை.) "புலம்பு சேண் அகல நீக்கி" என்றும் பாடம். இதுவே சிறந்த பாடமாம். வேழம் புலிக்கு வெருவி அதனோடு பொராது அயலுள்ள வேங்கை ஊறுபடப் பொருது தன் சினந்தணியும் என்றே கொண்டு யான் பிரிவுக்கு வருந்தியும் அவன்மேலுற்ற சினத்தை ஊடலின் வாயிலாகத் தணித்துக் கொள்வேன் என்பது உள்ளுறையாகக் கோடலுமாம். இச் செய்யுட் கருத்தொடு,

  
"புல்லா திராஅப் புலத்தை அவருறும் 
  
  அல்லனோய் காண்கஞ் சிறிது"         (குறள் - 1301)  

எனவருந் திருக்குறளையும் நினைவு கூர்க.

(217)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, வரைவிடை மெலிந்த தலைமகள் வன்பொறை எதிர்மொழிந்தது.

     (து - ம்.) என்பது, களவினின்று மணஞ் செய்துகொள்ள வேண்டிய தலைமகன் நீட்டித்தலால் வருத்தமுற்ற தலைவி, தன்னை வலிதிற் பொறுத்திரு வென்ற தோழியை நோக்கி "மாலையம்பொழுதும் வந்தது, அதன்மேல் இரவும் வந்திறுத்தது; அவர் கூறிய பருவங் கழிந்தது,