(து - ம்.) என்பது, தலைமகன் களவொழுக்க மேற்கொண்டு ஒழுகுபவன் ஒருநாள் பைய ஒருபுறமாக வருதலையறிந்த தோழி உள்ளுறையால் தலைவியை இல்லிடத்துச் செறித்ததையும் குறிப்பால் அவன் இன்றியமையாமையையும் அறியப்படுத்தி வரைவுகடாவுவாளாய்த் தலைவியை நோக்கித் தோழி! நீ அவருடைய குன்றத்தையேனுங் கண்டு மகிழும்படி வேங்கையிலே கட்டிய கயிற்று ஊசலிலே நின்னைவைத்து வீசியாட்டவோ ஒன்று கூறாயென அழுங்கிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும்...............அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.