பக்கம் எண் :


386


அளித்தல் வேண்டிப் பகலும் பல் பூங் கானல் வருதி - இவளைத் தலையளி செய்யவேண்டி நீ பகற்பொழுதின் கண்ணும் பலவாய மலர்களையுடைய கழியருகிலுள்ள சோலையில் அன்று கொண்ட குறிவயின் வாராநின்றனை; இந் நீர் ஆகலோ இனிது எனின் - இங்ஙனம் நீயிர் இருவீரும் களவின் ஒழுகுதல் இனிதேயா மென்றாலோ; அலரின் இவள் அருங்கடிப் படுகுவள் - ஊரார் கூறும் பழி மொழியே காரணமாக இவள் மீள்வதற்கரிய சிறையின்கண்ணே படுத்தப் படா நிற்பள்காண்!; அதனால் எல்லி வம் - ஆதலின் இனி நீ இராப் பொழுதையில் இங்கு வருகுவாயாக!; (என்றலும் அவன் இரவிலும் வருவானேயன்றி வரைந்து எய்துவன் எனக் கொண்டு மீட்டும் சேர்ப்பனே!) இவ் அம்பல் ஊர் - நீ அங்ஙனம் இரவின் வருவையாயினும் பழிச்சொல்லை மேலேறட்டுக் கூறா நிற்கும் இவ்வூர்; சுறவு இனம் கலித்த நிறை இரும் பரப்பின் துறையினும் - சுறாமீனினம் மிக்க நிறைந்த கடற்பரப்பிலுள்ள துறையிடத்தும்; துஞ்சாக் கண்ணர் பெண்டிரும் உடைத்து - துயிலாத கண்ணினராகிய கொடிய மாதரையும் உடையராயிராநின்றது; ஆதலின் இரவின் வருதலினும் இடும்பை எய்தும் போலும்; எ - று.

     (வி - ம்.) கடி - காவல். கலித்தல் - மிகுதல். வருதியென்றது வந்து மீள்வானை நோக்கிக் கூறியது: நிகழ்கால வினைமுற்று.

     இரவுக்குறி நேர்வாள் போன்று எல்லிவம்மோ வென்றாள். இரவுவரின் அவர்கண்டு பூசலிட்டுத் தலைமகளை இல்வயிற் செறிப்பரென அறிவுறுத்த வேண்டி இவ்வூர் துறையிலே துஞ்சாக்கண்ணராகிய பெண்டிரையுடையது என்றாள், இஃது, அழிவில் கூட்டத் தவன் புணர்வுமறுத்தல்.

     இறைச்சி :- சுறாமீனிருக்குங் கடலினது துறையிலே துஞ்சாத கண்ணையுடையரான மாதரை இவ்வூருடையதென்றது, தலைவியிருக்கின்ற மனையின்கண்ணே துஞ்சாத கண்ணளாகிய அன்னையை யாம் உடையேமாய் இராநின்றே மென்றதாம்.மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

     (பெரு - ரை.) இவள்தானும் காமம் பெரிதுண்மையால் காலைப் பொழுதென்று கருதாளாய் நினக்கு உடன்பட்டு ஒழுகுகின்றாள்; நீதானும் அன்பு பெரிதுடைமையின் அவளை அளித்தற்குப் பகலென்று கருதாமல் வாராநின்றாய் என்பது கருத்து.

     இன்னீர் ஆகலோ என்றும் பாடம் : இத்தன்மையீர் ஆதல் இனிதே யாம் என்க. எல்லி வருதற்கும் இடையூறாகத் துஞ்சாக்கண்ணராகிய பெண்டிரையும் உடைத்து ஆதலால் விரைந்து வரைந்துகோடலே அறிவுடைமையாம் என்றுணர்த்தியபடியாம்.

(223)