மரம் பட்டுப்போகும்படி அதன்பாலுள்ள மருந்தை முற்றுங் கொள்வார் அல்லர்; உரம் சா உயர்தவம் செய்யார் - மற்றும் தம் வலிமை முற்றும் கெடுமாறு உயர்ந்த தவத்தைச் செய்யார்; மன்னர் வளம்கெடப் பொன்னும் கொள்ளார் - அரசர் தம்முடைய குடிகளின் செல்வமெல்லாம் குறைபடும் வண்ணம் அவரிடத்து இறை வாங்குபவரல்லர்; தாம் கசிந்து என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழியச் சென்றோர் நங் காதலர் - அவற்றை உணர்ந்துவைத்தும் தாம் வருத்தம் மேற்கொண்டு வெயில் நிலைகொள்ள நீண்ட சுரத்துநெறி பின்னே ஒழிய எம்மைப் பிரிந்து சென்றவராகிய நங்காதலர்; தம் உண்மையின் நாம் உளம் - தாம் எம்மைப் பிரியாதுறைதலின் நாம் உயிரோடிராநின்றோம்; தாம் செய்பொருள் அளவு அதனால் மன்ற அறியார் - தாம் ஈட்ட விரும்பும் பொருள் காரணமாக எம்மைப் பிரிவராயின் அதனாலே வருவது எமது இறந்துபாடு என்பதனைத் திண்ணமாக அறிந்தவரல்லர்; என்றும் இன்ன நிலைமைத்து என்ப - எக்காலத்தும் இதுவே ஆடவர் இயற்கை என்பர் சான்றோர்; என்னோரும் அறிப - இதனை யாவரும் அறிந்திருப்பர் கண்டாய்; எ - று.
(வி - ம்.) பொருள்ஈட்டுவது இன்பநுகர்ச்சியின் பொருட்டன்றே. இன்பநுகர்ச்சிக்கு இன்றியமையாத எமது உயிரழிவின்பின் ஈட்டும் பொருளினால் வருவது ஒன்றுமில்லையென்பது எடுத்துக்காட்டிய உவமைகளினால் அறியப்படுவது, இது, துன்பத்துப் புலம்பல். மருந்து. மருந்துமரத்தில் உள்ள பட்டை முதலியன. மாந்தரென்பதனைச் செய்யாரென்பதனொடுங் கூட்டுக. மரஞ்சாம் முதலாய மூன்றும் பிறிது மொழிதலணி.
மற்றும், மருந்துகொள்ளும் மாந்தர் பின்னும் பயனைவேண்டியே அம் மரத்தைப் பாதுகாப்பர்; அங்ஙனமுமின்றி என் நலனை முழுவதூஉமுண்டு, யான் இறந்துபடும் வண்ணம் என்னைக் கைவிட்டுத் துறந்தார் எத்தகையார் என்பேனென அக்காதலர்நிலைகூறிப் புலந்தாளுமாம். மாந்தர் உரங்கெடுமாறு தவமுஞ்செய்கின்றிலர்: யான் அவ்வண்ணமின்றி என்னுள்ளம் வருந்தியொழியும்படி தவத்தினும் அவரின்பம் பெரிதுமன்றவெனக்கொண்டு தலைமடிய லாயினேனெனத் தன்னிலை கூறினாளுமாம். இங்ஙனங் கூறினவள் மீட்டும் காதலர் தன்னுயிருஞ் சேரக்கொண்டகன்றனராதலின் அவர் குடிஓம்பிக்கொள்ளாக் கொடுங்கோன் மன்னர்போலவும் தான் அவ் வரசனாலலைப்புண்ட குடிபோலவுமென இருவர்நிலையுங் கூறினாளுமாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) தாம் செய் பொருள் அளவு அறியார் என்றது ''நாளது சின்மையும் இளமையதருமையும் தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும் இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும் அன்பினது அகலமும் அகற்சியது அருமையும்" அப் பொருளோடொன்றாமையை அவர் அறிந்திலர் என்றவாறு. அவையாவன: யாக்கை நிலையா தென்னும் உணர்ச்சியோடு பொருளீட்டு் முணர்ச்சி ஒன்றாமையும்