பக்கம் எண் :


407


     
வியலறை மூழ்கிய வளியென் 
10
பசலை ஆகந் தீண்டிய சிறிதே. 

     (சொ - ள்.)தோழி வாழி - தோழீ! நீ வாழ்வாயாக!; நோயும் கைமிகப் பெரிது - எனக்குண்டாகிய காமநோயும் அளவு கடப்பப் பெரிதாய் இராநின்றது; மெய்யும் தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்று - என்னுடம்பும் தீயை உமிழ்கின்ற கொதிப்பினால் வெப்பமுடையதாயிரா நின்றது; புரை இல் நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து - ஆதலின் என் உடம்பை மெலிவித்துக் குற்றமற்ற நுண்ணிய நேர்மையையுடைய ஒளி பொருந்திய வளையைக் கையினின்று கழலச் செய்த தலைமகனது மலையிலே; அண்ணல் நெடு வரை ஆடித் தண் என வியல் அறை மூழ்கிய வளி - பெருமைபொருந்திய நீண்ட கொடுமுடியின் கண்ணே பரவி நின்று குளிர்ச்சியுறும்படி அகன்ற பாறையில் அளாவிய காற்றானது; என் பசலை ஆகம் சிறிது தீண்டிய - என்னுடைய பசலைநோயுற்ற மெய்யிலே சிறிதுபடவேண்டி; ஒய் என ஆங்கு உயரிய முன்றில் சிறிது பை எனக் கொளின் பெரிது நந்துவள் என - நீ விரைந்து சென்று "அங்கு உயர்ந்த நம்முடைய முன்றிலிலே இவளைச் சிறிதுபோது மெல்லக் கிடத்தினால் இவள் பெரிதும் நோய் நீங்கப்பெறுவள்" என்று; ஆண்டு உய்த்து நிரைய நெஞ்சத்து அன்னைக்கு இனி உரை - அவ்விடத்து என்னைக் கொண்டுபோய்விட்டு நரகம் போன்ற கொடிய நெஞ்சத்தையுடைய அன்னைக்கும் இப்பொழுதே உரைப்பாயாக!; எ - று.

    மலையிலேபட்ட காற்றையும் விரும்பியேற்பவளை நாம் வரையாது விடின் இறந்துபடுவது திண்ணமென் றஞ்சி விரைய வரைவொடு புகுவனென்னுங் கருத்தால் இங்ஙனங் கூறினாள். இல்வயிற் செறித்துக் காவலோம்பலின் நிரையம் போன்ற நெஞ்சத்தன்னை யென்றிகழ்ந்தாள்; இனித் துய்க்குங் காலத்தே துய்க்காவாறு தடுப்பவர் நிரையம்புகுபவென்னுங்கொள்கை உடைமையால் நிரயம்புகு நெஞ்சத் தன்னையென்றாளுமாம்.

     இறைச்சி :- கொடுமுடியிலே காற்று அளாவிச் சூழ்தல்போல என்னுள்ளம் அவனுடைய தோளிலேபட்டு அளாவிச் சூழாநிற்குமே என்று இரங்கியதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரிய என்றும் பாடம். இப் பாடமே மிகவும் சிறப்புடையதாம். இனி இச் செய்யுளை, "தோழி! வளிஆகந் தீண்டிய என்னை ஆண்டு உய்த்து அன்னையை நோக்கி இவட்கு நோயும் பெரிது மெய்யும் வெய்து ஆகின்று ஆதலால் ஒய்யெனச் சிறிது ஆங்கு உயரிய பை என முன்றிற்கொளின் இவள் பெரிது நந்துவள் என உரை" என இயைத்துப் பொருள் கோடலே நேரிதாம். உயிரிய - உயிர்த்தற் பொருட்டு என்க. இதனால் அன்னைக்கு என் இன்னுயிர் கழிவதாயினும் காமநோய் எனச் செப்பாதி என்று குறிப்பாலுணர்த்தினாளுமாதல் நுண்ணிதின் உணர்க.

(236)