(சொ - ள்.) தோழி கொடுஞ்சிறை உள் அடி பொறித்த வரி உடைத் தலைய நீர் அழி மருங்கின் - தோழீ! வளைந்த சிறகையுடைய பறவைகளின் உள்ளங்காற் சுவடு பொருந்திய வரிகளை மேற்கொண்டுள்ள நீர்வற்றிய இடங்கள் தோறும்; ஈர் அயிர் தோன்ற - மெல்லிய நுண்மணல் தோன்றாநிற்ப; வளரா வாடை உளர்பு நனி தீண்டலின் - மெல்லென வீசும் வாடைக்காற்று உளர்ந்து மிகவும் தீண்டுதலினாலே; வேழ் வெண்பூ விரிவன பல உடன் வேந்து வீசு கவரியின் பூம்புதல் அணிய - கரும்பின் வெளிய பூப் பலவும் ஒருசேர விரிவனவாய் அரசனுக்கு வீசப்படும் கவரிபோல மெல்லிய புதல்தோறும் அழகு செய்யா நிற்ப; மழை கழி விசும்பின் மாறி விழித்து இமைப்பதுபோல் ஞாயிறு விளங்குபு மறைய - மேகங்கள் நீங்கிச் செல்லுகின்ற ஆகாயத்தில் மாறி மாறி விழித்து மூடி இமைப்பதுபோல் ஞாயிறு தோன்றித் தோன்றி மறையாநிற்ப; எல்லை போகிய பொழுதின் எல் உற - பகற்காலஞ் சென்ற மாலைப் பொழுதோடு இராக்காலம் வந்து சேர்தலும்; பனிக் கால் கொண்ட பையுள் யாமத்து - பனி நிலத்தில் விழத்தொடங்கிய துன்பத்தைத் தருகின்ற நடு யாமத்தில்; பல் இதழ் உண்கண் கலுழ - இமையையுடைய மையுண்ட கண்கள் நீர் பெருகி வடியும்படி அழாநிற்ப; நில்லாப் பொருள் பிணிப் பிரிந்திசினோர் - நிலைநில்லாத பொருளை ஈட்டுதலில் உள்ளம்