நின்றது; கடிக்கொள அன்னை காக்கும் தொல் நலம் சிதையக் காண்தொறும் கலுழ்தல் அன்றியும் - காவன் மிகுதிப்பட அன்னையானவள் பாதுகாக்கும் இவளின் பழைய நலமெல்லாம் சிதையும்படி காணுந்தோறும் அழுதலல்லாமலும்; ஈண்டும் நீர் முத்துப்படு பரப்பின் கொற்கை முன்துறை - நெருங்கிய நீர்மிக்க முத்துக்கள் விளைகின்ற கடற்பரப்பினையுடைய கொற்கை நகரத்து முன்புள்ள துறையிலிருக்கும், சிறுபசு அடைய செப்பு ஊர் நெய்தல் தெள்நீர் மலரின்கண் தொலைந்த - சிறிய பசிய இலைகளையுடைய அழகமைந்த நெய்தலின் தெளிந்த நீரிலுள்ள மலர் போலக் கண்களே அழகு குலைந்தன; காமம் கரப்பு அரிய - அவை தாம் காமத்தைக் கரத்தலரியவாய் இராநின்றன; ஆதலின் நினக்கேற்றதொன்று செய்வாயாக!; எ - று.
கொற்கைநீரில் முத்து விளையுமென்றது நும் வதுவையால் தலைவியில்லகத்தார் மகிழ்ச்சியடைவா ரென்றவாறு. மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - வரைவு கடாதல்.
(பெரு - ரை.) தோளின் மெலிவு தொடியை மாற்றி மாற்றிச் செறிய இடுதலான் மறைக்கப்படுகின்றது. மெய்யின் இடிப்பு ஆயமொடு ஆடலின் மறைத்தற்கு ஒரு காரணம் உடையதாதலின் அவ்வாற்றான் மறைக்கப்படுகின்றது. இடிப்பு-மெலிவு. ஒன்று-ஓரேது. காண்டொறும் என்பதற்கு - தனது தொன்னலம் சிதையக் காண்டொறும் என்பதே அமையும். காண்டல், தலைவனையாதல் தன்னையாதல் காண்டல் என்னும் உரையாசிரியர் விளக்கம் பொருந்தாமையுணர்க. அன்னையாற் பாதுகாக்கப்படும் தனது தொன்னலம் என்பது கருத்து. தெண்ணீர்ச் சிறுபாசடைய செப்பூர் நெய்தன் மலரின்கண் என இயைத்துக் கண்ணுக்கே அடையாக்குக. இன் ஒப்புப் பொருட்டாகிய ஐந்தனுருபு என்க. கண் கலுழ்தலன்றியும் நலந்தொலைவதனால் காமம் கரப்பு அரிய ஆயின. ஆதலால் நீ விரைந்து வரைந்து கோடல் வேண்டும் என வற்புறுத்தபடியாம்.