தோழியை நோக்கி ஆடவர் பொருட் ககலுதல் பண்புதான் ஆகலின் அதனை மறாமலுடன்பட்டது நன்றென உவந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை.
| "கொடுமை யொழுக்கத்துத் தோழிக் குரியவை |
| வடுவறு சிறப்பிற் கற்பிற் றிரியாமைக் |
| காய்தலு முவத்தலும் பிரித்தலும் பெட்டலும் |
| ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல்-கற்- 6) |
எனவரும் விதிகளுள் உவத்தலின்கண் அமைத்துக்கொள்க.
| பார்பக வீழ்ந்த வேருடை விழுக்கோட் |
| டுடும்படைந் தன்ன நெடும்பொரி விளவின் |
| ஆட்டொழி பந்திற் கோட்டுமூக் கிறுபு |
| கம்பலத் தன்ன பைம்பயிர்த் தாஅம் |
5 | வெள்ளில் வல்சி வேற்றுநாட் டாரிடைச் |
| சேறும் நாமெனச் சொல்லச் சேயிழை |
| நன்றெனப் புரிந்தோய் நன்றுசெய் தனையே |
| செயல்படு மனத்தர் செய்பொருட் |
| ககல்வ ராடவ ரதுவதன் பண்பே. |
(சொ - ள்.) சேயிழை - சேயிழாய்!; பார் பக வீழ்ந்த வேர்விழுக் கோட்டு - நிலம் பிளவுபடுமாறு இறங்கிய வேரும் பெரிய கிளைகளும்; உடும்பு அடைந்து அன்ன பொரி உடை நெடு விளவின் - அடியில் உடும்புகள் செறிந்தாற்போன்ற பொரிந்த செதில்களும் உடைய நெடிய விளாமரத்தின்; கோட்டு மூக்கு இறுபு கம்பலத்து அன்ன பைம் பயிர் ஆட்டு ஒழி பந்தின் தாஅம்-கிளையில் மூக்கு ஊழ்த்து விழுந்து கம்பலத்தை விரித்தாலொத்த பசிய பயிரின் கண்ணே ஆடுதலொழிந்த பந்து கிடப்பது போலப் பரவியிருக்கும்; வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடை-அவ்விளாம்பழங்களையே உணவாகவுடைய அயனாட்டிலே செல்லுதற்கரிய பாலைவழியில்; நாம் சேறும் எனச் சொல்ல - யாம் செல்லா நிற்பேமென்று தலைவர் கூறலும்; நன்று எனப் புரிந்தோய் நன்று செய்தனை - அது நல்லதொரு காரியமென்று விருப்பத்தோடு கூறினை! ஆதலின் நீ நல்லதொன்றனைச் செய்தனைகாண்!; ஆடவர் செயல்படு மனத்தர் செய் பொருட்டு அகல்வர்-ஆடவர் வினைமேற்கொண்ட உள்ளத்தராய்ப் பொருளீட்டுதற்கு அகலா நிற்பர்; அது அதன் பண்பு - அங்ஙனம் அவர் அகலும்பொழுது மறுத்துக் கூறாமல் உடன்படுவதே அதற்குரிய பண்பாகும்.